Published : 16 Oct 2023 12:39 PM
Last Updated : 16 Oct 2023 12:39 PM

“அதானி குறித்த கேள்விகளை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை” - மஹூவா மீதான பாஜக குற்றச்சாட்டுக்கு சஞ்சய் ரவுத் பதில் 

சஞ்சய் ரவுத் | கோப்புப்படம்

புதுடெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் கேட்டார் என்ற பாஜகவின் குற்றச்சாட்டு, மஹுவாவின் மனஉறுதியை குலைக்கும் முயற்சி என்று சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.

பாஜக குற்றச்சாட்டு குறித்து சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி., சஞ்சய் ரவுத் கூறுகையில், "அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களை கேள்வி கேட்பதை பாரதிய ஜனதா கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை எழுப்புகின்றன. மஹூவா மொய்த்ரா திரிணமூல் காங்கிரஸின் புகழ் பெற்ற தலைவர். அவர்கள் (பாஜக) அவரது மனஉறுதியை குலைக்கப் பார்க்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிரநன்தனியிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் மஹுவாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க விசாரணை குழுவினை அமைக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.

துபே தனது கடிதத்தில் வழக்கறிஞர் ஒருவரின் ஆவணங்களைச் சுட்டிக்காட்டி, திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கும், தொழிலதிபருக்கும் இடையில் லஞ்சம் பரிமாறப்பட்டதற்கான மறுக்க முடியாத ஆதாரம் என்று தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் மொய்த்ரா கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமத்தைப் பற்றியதே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

துபேயின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள திரிணமூல் எம்.பி., மஹுவா மொய்த்ரா, "பாஜக எம்பிக்களுக்கு எதிரான பல நோட்டீஸ்கள் நிலுவையில் உள்ளன. முதலில் துபேக்கு எதிரான போலி வாக்குமூலம் குறித்த விசாரணையை முடித்துவிட்டு என் மீதான குற்றச்சாட்டுக்கு விசாரணை குழுவினை அமைக்க வேண்டும்" என்று சபாநாயகரை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த தனது எக்ஸ் பதிவில்,"போலி பட்டாதாரி மற்றும் பிற பாஜக பிரமுகர்கள் மீதான உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. சபாநாயகர் அவைகளை எல்லாம் முடித்த பின்னர் என் மீதான குற்றசாட்டுக்கு விசாரணை குழு அமைக்கட்டும். அதேபோல், அமலாக்கத்துறை மற்றும் பிற விசாரணை அமைப்புகள் அதானி மீதான நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யத பின்னர் என்வீட்டுக்கு விசாரணைக்காக வரட்டும். நான் காத்திருக்கிறேன் என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x