

புதுடெல்லி: மக்களவை மதியம் 12 மணிக்கு கூடியது. அப்போது, மீண்டும் எம்.பி. பதவியை பெற்ற ராகுல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் மக்களவைக்குள் நுழைந்தார் ராகுலுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நியூஸ்க்ளிக் இணைய ஊடகம் தொடர்பாக கேள்விகளை எழுப்பினார்.
அவர் கூறியதாவது: அரசுக்கு எதிரான கருத்துகளை பரப்பி அமைதியற்ற சூழலை உருவாக்க ஊடகங்கள் வெளிநாட்டிலிருந்து குறிப்பாக சீனா போன்ற நாடுகளிலிருந்து நிதியுதவியை பெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், நியூஸ்கிளிக் ஊடகம் ரூ.38 கோடி நிதியை திரட்டியுள்ளது.
அவர்களுக்கு எவ்வாறு நிதியுதவி கிடைத்தது, அதனால் பயனடைந்தவர்கள் யார் என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். 2005 மற்றும் 2014-க்கு இடையில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் காங்கிரஸ் கட்சி சீனாவிடமிருந்து பணத்தை பெற்றுள்ளது. கடந்த 2008-ல் சோனியாவையும், ராகுலையும் அவர்கள் சந்திக்க அழைத்திருந்தனர். டோக்லாம் நெருக்கடியின்போது அவர்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இவ்வாறு நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தலைவர்களான திக் விஜய் சிங், ரன்தீப் சுர்ஜேவாலா, மாவோயிஸ்டுகள் மற்றும் ரோகினி சிங் ஸ்வாதி சதுர்வேதி போன்ற பத்திரிகையாளர்களுக்கு எப்படி பணம் வழங்கப்பட்டது என்பதை நியூயார்க் டைம்ஸ் அறிக்கை தெளிவாக விளக்கியுள்ளதாக துபே குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, அவையில் கூச்சல் குழப்பும் நிலவியது. ராகுல் காந்தி இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில்துபே ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாகவும், அவரது கருத்துகள் மக்களவை பதிவுகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.