“பாஜக ஓர் அரசியல் சீரியல் கில்லர்” - சஞ்சய் ரவுத் கடும் விமர்சனம்

சஞ்சய் ரவுத் | கோப்புப்படம்
சஞ்சய் ரவுத் | கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: அஜித் பவாரின் கிளர்ச்சியால் மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்புகளுக்கிடையில் “பாஜக ஓர் அரசியல் சீரியல் கில்லர். அக்கட்சி செய்து வருவது அரசியல் பலாத்காரம்” என்று சிவசேனா (உத்தவ் அணி) மாநிலங்ளவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், கட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேருடன் சிவசேனா - பாஜக கூட்டணியில் இணைந்தார். பாஜக கூட்டணி அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இது குறித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "இதற்கு பின்னால் டெல்லியின் (மத்திய அரசு) எண்ணங்கள் உள்ளன. அவர்கள் அரசியலின் சீரியல் கில்லர். அவர்கள் செய்வது அரசியல் பலாத்காரம். குற்றங்களைச் செய்வதற்கான அவர்களின் வழிமுறை முன்பு இருந்ததைப் போல அப்படியே உள்ளது. தங்களின் சொந்த நலனுக்காக அவர்கள் அரசியல் கட்சிகளை உடைத்து, பிரிந்து வந்தவர்களை வைத்து கட்சிக்கான உரிமையைக் கோருகிறார்கள்" என்று காட்டமாக தெரிவித்தார்.

இதனிடையே, அஜித் பவாரின் செயலினைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களை உறுப்பினருமான பிரபுல் படேல் மற்றும் சுனில் தாக்ரே எம் உள்ளிட்ட ஐந்து தலைவர்கள் தேசியவாத கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அஜித் பவார் உள்ளிட்ட ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவையில் பதவி ஏற்றுக்கொண்ட 8 பேர் மீதும் தகுதி நீக்க நடவடிக்கையில் கட்சி ஈடுபட்டது.

இதற்கு பதிலடியாக, அஜித் பவார் அணி, என்சிபி மாநிலத் தலைவர் ஜெயந்த் பாடீலை நீக்கி உத்தரவிட்டது. அதேபோல், ஜெயந்த் பாடீல் மற்றும் ஜிதேந்ர அவ்ஹாத் ஆகியோரை அவை உறுப்பினர் பதவியில் இருந்து நீ்க்க பரிந்துரைத்துள்ளது.

கட்சி அலுவலகம் திறந்த அஜித் பவார்: மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்ற பின்னர், அஜித் பவார் தலைமை செயலகம் அருகில் புதிய என்சிபி அலுவலகம் திறக்க உள்ளார். தற்போதைய கட்சி அலுவலகம் மும்பையின் கிழக்கு பல்லார்ட்டில் உள்ளது. அஜித் பவார் அணி தாங்களே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றும், வேறு அந்த அணியும் இல்லை என்றும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, புதன்கிழமை இரண்டு அணிகளும் மும்பையில் தனித்தனியாக கூட்டம் நடத்தவுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிளவுக்கு பின்னர் நடக்கும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளும் பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவினை கோரியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in