Published : 27 Apr 2014 11:00 AM
Last Updated : 27 Apr 2014 11:00 AM

இறந்தவரை செயற்கை சுவாசத்தில் ஒரு வாரம் வைத்திருந்த மருத்துமனை: நீதிமன்ற உத்தரவுப்படி பதிவானது வழக்கு

பணம் பிடுங்குவதற்காக, இறந்த ஒரு பெண்ணை ஒரு வாரம் செயற்கை சுவாசத்தில் தனியார் மருத்துவமனையில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கடந்த பிப்ரவரியில் நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட போதிலும் அதைப் பதிவு செய்ய மறுத்து விட்டனர். இதையடுத்து, வழக்கறிஞர் மதன் போபால் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடத்தார். இதை விசாரித்த நீதிபதி வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவின்படி ஷாஜாஹானாபாத் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஷாஜஹானாபாத் போலீசார் ‘தி இந்து'விடம் கூறுகையில், ‘‘டாக்டர் ஜி.எஸ்.கௌதம், டாக்டர் புபேந்தர் ஸ்ரீவாத்சவ், டாக்டர் ரோஹித்குமார் மற்றும் டாக்டர் ஆனந்த யாதவ் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள காந்தி அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவர்களிடம் கருத்து கேட்டிருக்கிறோம். அவர்கள் அளிக்கும் அறிக்கையை வைத்து 4 பேரையும் கைது செய்வதா? வேண்டாமா? என முடிவு செய்வோம்’’ என்றார்.

போபாலின் டீலா ஜமால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 52 வயது சுஷ்மா. இவருக்கு கடந்த பிப்ரவரி 2–ல் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அருகிலுள்ள எல்.பி.எஸ். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவரது உயிர் சில மணி நேரங்களில் பிரிந்திருக்கிறது.

எனினும் அவருக்கு பொருத்தியிருந்த செயற்கை சுவாச கருவியைக் கழட்டாமல் தனி அறையில் வைக்கப்பட்டிருந்தார். இவரை காண உறவினர்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் கொண்ட சுஷ்மாவின் கணவர் தம் குடும்ப நண்பரான வழக்கறிஞர் மதன் நந்தன் சஹாயை வரவழைத்துள்ளார். அவர் வந்து பார்த்த பின் சுஷ்மா இறந்து ஆறு நாட்களான தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் புகாரை மறுக்கும் எல்.பி.எஸ். மருத்துவமனை நிர்வாகத்தினர், சுஷ்மாவின் வழக்கறிஞர் வெளியில் இருந்து சில மருத்துவர்களை அனுமதியின்றி அழைத்து வந்து சிகிச்சைகளை பரிசோதித்ததாகவும் அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் கோபம் கொண்டு பழிவாங்கும் எண்ணத்துடன் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் கூறுகிறார்கள்.

இந்த நிகழ்வை சித்தரிக்கும் வகையில் ஏற்கெனவே பல்வேறு திரைப்படங்களில் காட்சிகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x