

புதிய மருத்துவக் கல்லூரி விவகாரம்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்: புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் தனது கடிதத்தில், தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி: மயிலாடுதுறை அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு கடையில் நிகழ்ந்த விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணாமலையை மாற்ற அதிமுக கோரிக்கையா? - இபிஎஸ் மறுப்பு: "தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக கூறியதாக தெரிவிக்கப்படும் கருத்துகளும் தவறானது. நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதுபோல், பாஜகவுக்கு 20 இடங்கள் வேண்டும், 15 இடங்கள் வேண்டும் என்றெல்லாம் அவர்களும் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அண்ணாமலையின் நடைபயணம் ஒத்திவைப்பு: உடல்நலக்குறைவு காரணமாக, இம்மாதம் 6-ம் தேதி தொடங்கவிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணம், அக்.16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு!: பாரிஸில் பிறந்து அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் மவுங்கி பவெண்டி, அமெரிக்காவின் கிளவ்லேண்டு நகரில் பிறந்து நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் லூயிஸ் புரூஸ், ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நானோகிரிஸ்டல்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிய அலெக்சி எகிமோவ் ஆகியோருக்கு 2023-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகளை கண்டறிந்து தொகுத்ததற்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது கண்டுபிடிப்புதான் எல்இடி-க்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிக்கிம் வெள்ளத்தில் 23 ராணுவ வீரர்கள் மாயம்: வடகிழக்கு மாநிலமான சிக்கிம்மில் உள்ள லாச்சென் பள்ளத்தாக்கில் புதன்கிழமை காலை மேகவெடிப்பு காரணமாக டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் ராணுவ வாகனங்கள் சில நீரில் மூழ்கின. அதிலிருந்த 23 ராணுவ வீரர்களைக் காணவில்லை. இதனை ராணுவம் உறுதி செய்துள்ளது. மேகவெடிப்பு நிகழ்ந்தவுடன் சிக்கிம் முழுவதும் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திடீர் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் பிரேம் சிங் தமங் பாதிப்புகளை ஆய்வு செய்தார். இவை ஒருபுறம் இருக்க ராணுவ வீரர்களைத் தேடும் பணியும் நடந்து வருகிறது.
தலைநகர் காங்டாக் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் புதன்கிழமை காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது. இதே வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, “பிரதமர் மோடி தோல்வியை பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர் அவநம்பிக்கை கொள்கிறார். அவநம்பிக்கையான செயல்களையே நாடுகிறார். அதுதான் இப்போது நடக்கிறது” என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதால் தங்கள் கட்சியின் எம்.பி.யான சஞ்சய் சிங் குறிவைக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
‘69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துக’: "69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று வழக்கு ஒன்றில், சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 4 கேள்விகள்: மணிப்பூரில் கடந்த 5 மாதங்களாக வன்முறை நீடித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக பிரதமர் மோடி கடைசியாக மணிப்பூருக்கு எப்போது சென்றார்?, பிரதமர் நரேந்திர மோடி கடைசியாக மணிப்பூர் முதல்வரிடம் எப்போது பேசினார்?, மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களிடம் பிரதமர் மோடி கடைசியாக எப்போது சந்தித்தார்?, மணிப்பூரைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் மோடி கடைசியாக இது குறித்து எப்போது ஆலோசனை நடத்தினார்? என்று பிரதமர் மோடிக்கு 4 கேள்விகளை எழுப்பி உள்ளது.
நியூஸ்கிளிக் ஆசிரியருக்கு 7 நாள் போலீஸ் காவல்: நியூஸ்கிளிக் நிறுவனத்தின் ஆசிரியர் பிரபிர் புர்கயாஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் 7 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.