

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக, அக்.6-ம் தேதி தொடங்கவிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம், அக்.16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுளள் பதிவில், "மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை, அக்டோபர் 6-ம் தேதி தொடங்கவிருந்த நிலையில், மாநிலத் தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. நாளை திட்டமிட்டப்படி மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெறும். திருத்தப்பட்ட நடைபயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
அத்துடன், அண்ணாமலை உடல்நிலை தொடர்பாக, க்ளென் ஈகிள்ஸ் தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கை ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. அதில், அண்ணாமலை இருமல், மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி, உடல் வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, அண்ணாமலை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் இறுதியில், கோவையில் தொடங்கவிருந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.