‘நியூஸ்கிளிக்’ ரெய்டு பின்னணி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.3, 2023

‘நியூஸ்கிளிக்’ ரெய்டு பின்னணி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.3, 2023
Updated on
3 min read

“சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங். முயற்சி”: “சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்க விரும்புகிறதா?” என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுளார்.

சத்தீஸ்கரின் ஜக்டால்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் இந்துக்களைப் பிரிக்க முயற்சிக்கிறது. மக்கள் தொகையின் பெரும் பகுதியாக ஏழைகள் உள்ளனர். ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சியோ, நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமையை மக்களே தீர்மானிப்பார்கள் என்று சொல்கிறது. அப்படியென்றால், இப்போது காங்கிரஸ் சிறுபான்மையினரின் உரிமைகளை குறைக்க நினைக்கிறதா? எனக்கு எல்லோரையும்விட ஏழைகளே பிரதானம். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக தொடர்ந்து வேலை செய்வேன்” என்று மோடி பேசியுள்ளார்.

முன்னதாக, பிஹாரில் 63.14 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சாதிவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆதரித்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால், பாஜக இதனை எதிர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையை துல்லியமாக அறிய முடியும்” என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘நியூஸ்கிளிக்’ நிறுவன டெல்லி அலுவலகத்துக்கு சீல்: நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். ‘நியூஸ்கிளிக்’ ஆன்லைன் செய்தி நிறுவனம், அமெரிக்க பணக்காரரான நெவில்லி ராய் இடம் இருந்து பணம் பெற்றதாகவும், சீனாவுக்கு ஆதரவாக இந்தியாவில் செய்திகளை வெளியிடுவதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்ததை அடுத்து, இந்நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. நியூஸ்கிளிக் நிறுவனம் ரூ.86 கோடியை பெற்றதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், டெல்லி காவல் துறையின் சிறப்பு போலீசார், நியூஸ்கிளிக் நிறுவனத்துடன் தொடர்புடைய 30 இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இந்நிறுவனத்தில் பணிபுரியும் 6 பத்திரிகையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் லேப்டாப், மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு டெல்லி போலீசார் சீல் வைத்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "விசாரணை அமைப்புகள் தங்கள் பணியை செய்கின்றன. ஆதாரம் மற்றும் புகாரின் அடிப்படையில்தான் போலீசார் இந்த சோதனையை நடத்துவார்கள்" என தெரிவித்துள்ளார்.

‘நியூஸ்கிளிக்’ ரெய்டு- எதிர்க்கட்சிகள் கண்டனம்: ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்களின் வீடுகளில் டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்திய நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதேவேளையில், ‘யாராவது தவறு செய்திருந்தால், விதிமுறைகளின்படி விசாரணை நடத்த விசாரணை நிறுவனங்களுக்கு சுதந்திரம் உண்டு’ என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சோதனை குறித்து ‘தி பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா’ தனது கவலையை தெரிவித்துள்ளது. அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நியூஸ்கிளிக் உடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களின் வீடுகள், தொடர்புடையவர்களின் வீடுகளில் நடத்தப்படும் சோதனைகள் குறித்து ‘தி பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா’ ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. நிலைமையினை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், விவரங்களை வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறுகையில், “பிஹார் சாதிவாரி கணக்கெடுப்பு வெளிக்கொண்டு வந்துள்ள அதிர்ச்சியான விஷயம் மற்றும் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலுத்திருக்கும் கோரிக்கையில் இருந்து திசைத் திருப்பும் வேலை இது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர அரசு மருத்துவமனையில் 31 பேர் உயிரிழப்பு: மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் நகரில் உள்ளது ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் திங்கள்கிழமை 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது மேலும் 7 பேர் உயிரிழந்ததை அடுத்து, இந்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் குழந்தைகள். உயிரிழப்புக்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா வலியுறுத்தல்: அக்டோபர் 10-க்குள் இந்தியாவில் இருக்கும் கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும், அதற்கு பின்னர் இந்தியாவில் இருக்கும் அவர்களின் தூதரகப் பொறுப்புகள் நீக்கப்படும் என்று இந்தியா கூறியிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு: 2023-ம் ஆண்டு இயற்பியலுகான நோபல் பரிசுக்கு விஞ்ஞானிகளான அமெரிக்காவைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஜெர்மனியைச் சேர்ந்த ஃபெரெங்க் க்ரவுஸ், ஸ்வீடனைச் சேர்ந்த அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக ‘தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ்’ தெரிவித்தது.

‘சமூக நீதியை செயலில் காட்ட சிறந்த வழி சாதிவாரி கணக்கெடுப்பு’: "தமிழகத்தை ஆளும் திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். அதற்கான சிறந்த வழி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதுதான். வரும் 9-ம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவையின் துணை நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

"அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்துப் பிரிவினருக்கும் நியாயமாக சென்றடைவதை உறுதிபடுத்தவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதற்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதனிடையே, "சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்தியாவில் உள்ள மக்களை சாதி ரீதியாக பார்த்துதான், அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறுவது, இந்தியாவை அரசியல்வாதிகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதாகவே கருத வேண்டியுள்ளது" என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும்: பாஜக மாநில துணை தலைவர் உறுதி: "அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது" என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.

இதனிடையே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், "தென்னை விவசாயிகள் கோரிக்கை தொடர்பாகவே மத்திய அமைச்சரைச் சந்தித்தோம். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எல்லாம் பேசவில்லை. இந்தச் சந்திப்புக்கு வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது" என்று கூறியுள்ளார்.

இந்தியா - நெதர்லாந்து பயிற்சி ஆட்டம் ரத்து: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்தியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளது: உலக வங்கி: சர்வதேச சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளதாகவும், 2023-24 நிதி ஆண்டுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி 6.3% ஆக இருக்கும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in