Published : 03 Oct 2023 06:14 PM
Last Updated : 03 Oct 2023 06:14 PM
புதுடெல்லி: நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். ‘நியூஸ்கிளிக்’ ஆன்லைன் செய்தி நிறுவனம், அமெரிக்க பணக்காரரான நெவில்லி ராய் இடம் இருந்து பணம் பெற்றதாகவும், சீனாவுக்கு ஆதரவாக இந்தியாவில் செய்திகளை வெளியிடுவதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்ததை அடுத்து, இந்நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. நியூஸ்கிளிக் நிறுவனம் ரூ.86 கோடியை பெற்றதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், டெல்லி காவல் துறையின் சிறப்பு போலீசார், நியூஸ்கிளிக் நிறுவனத்துடன் தொடர்புடைய 30 இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இந்நிறுவனத்தில் பணிபுரியும் 6 பத்திரிகையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் லேப்டாப், மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு டெல்லி போலீசார் சீல் வைத்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "விசாரணை அமைப்புகள் தங்கள் பணியை செய்கின்றன. ஆதாரம் மற்றும் புகாரின் அடிப்படையில்தான் போலீசார் இந்த சோதனையை நடத்துவார்கள்" என தெரிவித்துள்ளார்.
‘நியூஸ்கிளிக்’ விவகாரத்தின் பின்னணி என்ன? - நியூஸ்கிளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்பட்டுவந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூஸ்கிளிக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது. அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்புக் கோரி நியூஸ் கிளிக் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீதும், அதன் ஆசிரியர் பிரபீர் புர்கயாஷ்தா மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக நியூஸ்கிளிக் விவகாரத்தில் அமலாக்கத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ‘நியூஸ்கிளிக்’ நிறுவனத்துக்கு சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை ‘நியூஸ்கிளிக்’ நிறுவனம் மீதான தனது விசாரணையை தீவிரப்படுத்தியது.
மேலும், நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக் கோரி அமலாக்கத் துறை, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அமலாக்கத் துறையின் மனு தொடர்பாக பதிலளிக்கக் கோரி நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கும், அதன் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான பிரபீர் புர்கயாஷ்தாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்தச் சூழலில் அமலாக்கத் துறை தகவல்களின் அடிப்படையில் டெல்லி போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வலுக்கும் எதிர்ப்பும் கண்டனமும்: இந்தச் சோதனை குறித்து ‘தி பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா’ தனது கவலையை தெரிவித்துள்ளது. அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’‘நியூஸ்கிளிக் உடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களின் வீடுகள், தொடர்புடையவர்களின் வீடுகளில் நடத்தப்படும் சோதனைகள் குறித்து ‘தி பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா’ ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. நிலைமையினை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், விவரங்களை வெளியிடுவோம். ‘பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா’ பத்திரிகையாளர்களுடன் ஒற்றுமையுடன் துணை நிற்கிறது. மேலும், இதுகுறித்த விவரங்களை வெளியிடுமாறு அரசிடம் கோருகிறது" என்று தெரிவித்துள்ளது.
ராஷ்ட்ரீய ஜனாத தளம் கட்சியின் எம்.பி. மனோஜ் ஜா, “இந்த சோதனை மிகவும் துரதிஷ்டவசமானது. அவர்களை ஏன் டெல்லி போலீஸ் என்று சொல்கிறீர்கள். அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் இருப்பவர்கள். அவருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது. அவர்களுடைய (பாஜக) பஜன் மண்டலியில் இணைய மறுப்பவர்களுக்கு எதிராக அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். இதன்மூலமாக அவர்கள் எதைக் காட்ட முயல்கிறார்கள். இந்தச் சம்பவம் வரலாற்றில் நிச்சயம் எழுதப்படும். இந்த நடவடிக்கைக்கான பலனை அரசு அனுபவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறுகையில், “நியூஸ்கிளிக்-க்கு பங்களிப்பு செய்யும் செய்தியாளர்களின் வீடுகளில் அதிகாலையில் நடந்த சோதனை, பிஹார் சாதிவாரி கணக்கெடுப்பு வெளிக்கொண்டு வந்துள்ள அதிர்ச்சியான விஷயம் மற்றும் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலுத்திருக்கும் கோரிக்கையில் இருந்து திசைத் திருப்பும் வேலை" என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எப்போதெல்லாம் அவர்கள் சிக்கலான விஷயங்களை சந்திக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் வழக்கமாக கையிலெடுக்கும் ஆயுதமே திசைத் திருப்புதல்தான்” என்றும் சாடியுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மூத்த பத்திரிகையாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று, அவர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் செல்போன்கள், லேப் டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதிய இந்தியா பத்திரிகையாளர்களை மிகவும் தீவிரமாக பார்க்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, போலீஸார் தன்னுடைய வீட்டுக்கு சோதனையிட வந்ததாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "என்னுடன் தங்கியிருக்கும் தோழர் ஒருவரின் மகன் நியூஸ்கிளிக்கில் பணிபுரிகிறார். அவரிடம் போலீஸார் விசாரணை செய்ய வந்தார்கள். அவருடைய லேப் டாப் மற்றும் செல்போன்களை எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் என்ன விசாரணை செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இது ஊடகங்களை மூடிமறைக்கும் முயற்சியாக இருந்தால் இதன் பின்னணியில் இருக்கும் காரணத்தை நாடு அறியவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி, "இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்றும், இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறித்தும் வெளிநாடுகளில் இந்திய அரசு பேசுகிறது. அதேநேரத்தில் மீதமுள்ள சுயாதீமான பத்திரிகைகள் மீது விசாரணை அமைப்புகளைக் கொண்டு சோதனை நடத்துகிறது. அவர்களின் தொலைபேசி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவி்ரோதமாக முதலில் கைது செய்வதும், அதன்பிறகு பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்குவதும் தொடர்ந்து நடைபெறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT