Published : 03 Oct 2023 10:09 AM
Last Updated : 03 Oct 2023 10:09 AM

நியூஸ்கிளிக் நிறுவன செய்தியாளர்கள், தொடர்புடைய நபர்கள் வீடுகளில் டெல்லி போலீஸார் அதிரடி சோதனை

நியூஸ்கிளிக் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப் படை வீரர்கள்.

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், தொடர்புடைய நபர்களின் வீடுகளில் டெல்லி போலீஸார் இன்று (அக்.3) அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாரண்ட் ஏதும் காட்டப்படாமலேயேகூட சோதனைகள் நடைபெறுவதாக சக பத்திரிகையாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சோதனை தொடர்பாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் அபிஷர் சர்மா, "என் வீட்டில் டெல்லி போலீஸார் சோதனை நடத்தினர். எனது செல்போன், லேப்டாப்பை எடுத்துச் சென்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் பாஷா சிங் என்ற பத்திரிகையாளர், "என் செல்போனில் இருந்து இதுதான் கடைசி ட்வீட். டெல்லி போலீஸார் எனது போனை கைப்பற்றினர்" என்று பதிவிட்டிருந்தார். இவர் நியூஸ்கிளிக் இணையத்தில் விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நெறியாளர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர்கள் சிலர் 'தி நியூயார்க் டைம்ஸ்' இதழில் நியூஸ்கிளிக் இணையதளத்துக்கு சீன நிறுவனங்கள் நிதியுதவி அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினர். குறிப்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், "நியூஸ்கிளிக் செய்தி நிறுவத்துக்கு நெவைல் ராய் சிங்கம் என்பவர் நிதியுதவி செய்கிறார். இவருக்கு சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நேரடித் தொடர்பு உண்டு. மேலும் இவருக்கு சீன ஊடக நிறுவனமான மக்கு குரூப்புடனும் தொடர்பு உள்ளது" என்றார்.அதேபோல் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், "நியூஸ்கிளிக் இணையம் பரப்பும் பொய்கள், வெறுப்பு ஆகியனவை ராகுல்காந்தியின் போலி பிரச்சாரங்களை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன" என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

நியூஸ் கிளிக் சர்ச்சை பின்னணி என்ன? நியூஸ் கிளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்பட்டுவந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூஸ்கிளிக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்புக் கோரி நியூஸ் கிளிக் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீதும், அதன் ஆசிரியர் பிரபீர் புர்கயாஷ்தா மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக நியூஸ்கிளிக் விவகாரத்தில் அமலாக்கத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை நியூஸ்கிளிக் நிறுவனம் மீதான தனது விசாரணையை தீவிரப்படுத்தியது.

மேலும், நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அமலாக்கத் துறையின் மனு தொடர்பாக பதிலளிக்கக் கோரி நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கும் அதன் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான பிரபீர் புர்கயாஷ்தாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்தச் சூழலில் அமலாக்கத் துறை தகவல்களின் அடிப்படையில் டெல்லி போலீஸார் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x