Published : 27 Sep 2023 09:27 AM
Last Updated : 27 Sep 2023 09:27 AM

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி கேட்பது பொருத்தமற்றது - நியூயார்க் நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காட்டம்

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

நியூயார்க்: "நான் The Five Eyes புலனாய்வு அமைப்பைச் சார்ந்தவர் இல்லை. நான் எஃப்பிஐ அமைப்பைச் சார்ந்தவரும் இல்லை. அதனால் நீங்கள் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை செய்யப்பட்டது பற்றிய கேள்வியை என்னிடம் கேட்பது பொருத்தமற்றது" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த வெளியுறவு கூட்டமைப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெய்சங்கரிடம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக ஃபை அய்ஸ் (Five Eyes) புலனாய்வு அமைப்புக்குள் தகவல் பரிமாறப்பட்டதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "நான் The Five Eyes அமைப்பைச் சார்ந்தவர் இல்லை. நான் எஃப்பிஐ அமைப்பைச் சார்ந்தவரும் இல்லை. அதனால் நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பது பொருத்தமற்றது" என்றார். (The Five Eyes என்பது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன் உள்ளிட்ட 5 நாடுகளை உள்ளடக்கிய கண்காணிப்பு அமைப்பாகும்)

தொடர்ந்து அமைச்சர் ஜெய்சங்கரிடம், இந்தியா மீது கனடா சுமத்தியுள்ள அந்நிய மண்ணில் படுகொலை குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ஜெய்சங்கர், "காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் கொலையில் நாங்கள் கனடாவிடம் குறிப்பிட்ட, பொருத்தமான அதாரங்கள், தகவல்களை அளிக்குமாறு கோரியுள்ளோம். அவ்வாறு அளித்தால் அதை ஆராய்வதாகச் சொல்லி இருக்கிறோம். அதைவிடுத்து அவர்கள் குற்றஞ்சாட்டிய வகையிலான செயல்களில் ஈடுபடுவது இந்திய அரசின் கொள்கையே அல்ல.

கடந்த சில ஆண்டுகளாகவே கனடாவில் திட்டமிட்ட குற்றங்கள் அதுவும் குறிப்பாக பிரிவினைவாத குழுக்களால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. பிரிவினைவாத குழுக்களின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் கனடாவுக்கு நிறைய தகவல்களைக் கொடுத்துள்ளோம். அதுபோல் குறிப்பிட்ட சிலரை நாடு கடத்தும்படி ஒரு பட்டியலும் கொடுத்துள்ளோம். இதையும் தாண்டி எங்களது தூதரகங்கள் தாக்கப்பட்டுள்ளன. தூதரக அதிகாரிகள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

இப்படியான சூழலில் எனக்கு யாராவது, ஏதாவது குறிப்பிட்டுக் கொடுத்தால், அதை நான் கனடாவுடன் பொருத்திப் பார்க்க வேண்டியதில்லை. ஆனால், ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால், யாரேனும் அதை அரசாங்க ரீதியாக குறிப்பிட்டால், நான் அதை உற்று கவனித்துப் பார்ப்பேன். எனவே ஹர்தீப் கொலையில் கனடா குறிப்பிட்ட ஆதாரங்களைக் கொடுக்கட்டும் நான் அதை உற்றுப் பார்க்கிறேன்" என்றார்.

சர்ச்சையின் பின்னணி: காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த 2020-ம் ஆண்டிலேயே இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாட்களுக்கு முன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டது.

இதற்குப் பதிலடி தரும் விதமாக டெல்லியில் உள்ள கனடா தூதரை நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டது. மேலும், கனடாவைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய விசா வழங்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் இந்திய அரசு அறிவித்தது. இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான இந்த மோதல் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இருநாட்டு உறவு பாதிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x