Published : 26 Sep 2023 08:19 AM
Last Updated : 26 Sep 2023 08:19 AM

இந்திய விமானப் படையில்  சி-295 ரக விமானம் சேர்ப்பு

கோப்புப்படம்

காஸியாபாத்: ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் இந்திய விமானப்படைக்காக சி-295 ரக விமானங்களைத் தயாரித்து அளிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஏர் பஸ் நிறுவனமும் கடந்த 2021-ல் கையெழுத்திட்டன.

இதைத் தொடர்ந்து ஸ்பெயினின் செவில் நகரிலுள்ள உற்பத்தி ஆலையில் விமானத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சி-295 வகையைச் சேர்ந்த 56 விமானங்களை இந்திய விமானப் படைக்கு அளிக்குமாறு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் விமானம் 2 வாரங்களுக்கு முன்பு இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சி-295எம்டபிள்யூ ரக விமானமானது 5 முதல் 10 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது. பாராசூட் குழுவினரை குறிப்பிட்ட இடத்தில் தரை இறக்குவதற்கும், சரக்குகளை தரை இறக்குவதற்கும் இந்த வகையிலான விமானங்கள் பயன்படும்.

இந்த விமானத்தை குறுகிய தூர ஓடுபாதையில் தரையிறக்கவும், மேலெழுப்பவும் முடியும். மேலும் இது தொடர்ச்சியாக 11 மணி நேரம் பறக்கும் சக்தி படைத்தது. இதுபோன்ற விமானங்கள் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், உக்ரைன், பிரேசில், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன. தற்போது இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இந்நிலையில் ஸ்பெயினில் தயாரான விமானம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காஸியாபாத்திலுள்ள ஹிண்டன் விமானப் படை தளத்துக்கு வந்து சேர்ந்தது.

இதையடுத்து முறைப்படி விமானப் படையில் இந்த சி-295 ரக விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடைபெற்றது.

இதற்காக விமானப்படை தளத்தில் சர்வதர்ம பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி, மூத்த அதிகாரிகள், ஏர் பஸ் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விமானம் தற்போது விமானப்படையின் 11-வது ஸ்குவாட்ரனில் சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பழமையான ஸ்குவாட்ரன்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஸ்குவாட்ரனின் விமானப் படைத் தளமானது வதோதரா விமானப் படைத்தளத்தில் அமைந்துள்ளது.

இதேபோன்ற மேலும் 16 விமானங்களை ஏர் பஸ் நிறுவனம் 2025-ம் ஆண்டுக்குள் தயாரித்து வழங்கும். மேலும், 40 விமானங்களை இந்தியாவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (டிஏஎஸ்எல்) நிறுவனமும், ஏர் பஸ் நிறுவனமும் இணைந்து அமைக்கவுள்ள ஆலையில் தயாராகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x