Published : 22 Sep 2023 12:59 AM
Last Updated : 22 Sep 2023 12:59 AM

''இது வெறும் சட்டம் அல்ல'' - மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் மோடி

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் அரசியல் கட்சிகளின் நேர்மறை சிந்தனையைக் காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாநிலங்களவையில் நிறைவேறியது. முன்னதாக நேற்றுமுன்தினம் மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையிலும் நிறைவேறியது. ஒருவரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், 215 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது. இந்த மசோதா சட்டமாக மாற இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் மட்டும் தேவை. 454 எம்.பி.க்கள் ஆதரவுடன் நேற்று மக்களவையில் மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மசோதா விவாதத்தின்போது, மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுகையில், "விவாதங்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்தன. எதிர்காலத்திலும், இந்த விவாதம் நம் அனைவருக்கும் உதவும். மசோதா நிறைவேற ஒருமித்த கருத்துடன் ஆதரவளித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி. மசோதா நிறைவேற்றம் அரசியல் கட்சிகளின் நேர்மறை சிந்தனையைக் காட்டுகிறது. இந்த உத்வேகம் இந்தியர்களிடையே புதிய சுயமரியாதையை பிறப்பிக்கும். மேலும் மகளிருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் புதிய ஆற்றலை கொடுக்கும்" என்றார்.

இதுபோல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "நமது தேசத்தின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு முக்கியமான தருணம்! 140 கோடி இந்தியர்களுக்கு வாழ்த்துகள். மசோதாவுக்கு வாக்களித்த அனைத்து ராஜ்யசபா எம்.பி.க்களுக்கும் நன்றி. இத்தகைய ஒருமித்த ஆதரவு உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. இது வெறும் சட்டம் அல்ல; நம் தேசத்தை உருவாக்கிய எண்ணற்ற பெண்களுக்கு இது ஒரு மரியாதை. மகளிரின் பங்களிப்புகளால் இந்தியா வளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டங்களில் நம் தேசத்தின் அனைத்து பெண்களின் வலிமை, தைரியம் மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மை ஆகியவற்றை நினைவுபடுத்துவோம். அவர்களின் குரல்கள் இன்னும் திறம்படக் கேட்கப்படுவதை உறுதி செய்வதற்கான வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x