Published : 21 Sep 2023 07:26 AM
Last Updated : 21 Sep 2023 07:26 AM

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு சோனியா ஆதரவு: உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

சோனியா காந்தி

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முழு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் நேற்று முன்தினம் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அவையில் விவாதம் நடைபெற்றது.

இந்த மசோதா மீது தொடர்ந்து நேற்றும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு சோனியா காந்தி பேசியதாவது:

மகளிர் இடஒதுக்கீடு மசோதாஎன்பது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவு. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் சார்பில் நான் ஆதரிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது. பல்வேறு துறைகளில் அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

மசோதா நிறைவேற்றப்பட்டு தாமதப்படுத்தாமல் விரைந்து அமலுக்கு கொண்டு வர வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திதலித், பழங்குடியின பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். இதேபோல் ஓபிசி உள் ஒதுக்கீடும் தேவை.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க சரோஜினி நாயுடு, சுச்சேத்தா கிருபாளினி, விஜயலட்சுமி பண்டிட், அருணா ஆசப் அலி போன்ற இந்திய சரித்திரப் பெண்மணிகள் பாடுபட்டனர். நாட்டு மக்களுக்காக அவர்கள் பாடுபட்டதை நான் இங்கு நினைவுகூர்கிறேன்.

இந்த மசோதா நிறைவேறினால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். அதே நேரத்தில் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்த மசோதாவுக்காக 13 ஆண்டுகள் பெண்கள் பொறுமையுடன் காத்திருந்தனர். ஆனால் இப்போது, இந்த மசோதாவுக்காக மேலும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று பெண்களுக்குச் சொல்லப்படுகிறது.

இன்னும் காத்திருப்பு ஏன்? இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்? 2, 3, 6 அல்லது 8ஆண்டுகள்? இன்னும் எத்தனை காலம்தான் காத்திருப்பது? இந்தமசோதாவை உடனடியாக நிறைவேற்றி அமல்படுத்த வேண்டும்.

இந்தியாவில் பெண்கள் தங்கள் சொந்த லாபத்தைப் பற்றி நினைப்பதே இல்லை. அனைவருக்கும் நன்மை செய்யும் ஒரு நதியைப் போல அவர்கள் உழைத்துக் கொண்டே இருந்தனர்.

ஒரு பெண்ணின் பொறுமையை புரிந்து கொள்ள முடியாது. பெண்கள்தான் நம்மைபுத்திசாலியாகவும் கடின உழைப்பாளியாகவும் மாற்றுகின்றனர். எனவே, எங்கள் கோரிக்கை எல்லாம், இந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x