Published : 21 Sep 2023 05:25 AM
Last Updated : 21 Sep 2023 05:25 AM

பாரபட்சம், அநீதியை அகற்றுவதே மகளிர் இடஒதுக்கீடு: மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கருத்து

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா இடஒதுக்கீடு பற்றியது அல்ல, மாறாக பாரபட்சம் மற்றும் அநீதியை அகற்றும் செயலாகும் என்று திமுக எம்.பி. கூறினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் மசோதாவாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இதனை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

இந்த மசோதா மீதான விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது, இந்த மசோதாவில் குறிப்பிட்டுள்ளவாறு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகுதான் நடைமுறைக்கு வரும்.

இதனால் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படக்கூடும் என்பதால் மசோதாவில் உள்ள ‘தொகுதி மறுவரையறைக்கு பிறகு’ என்ற ஷரத்தை நீக்க வேண்டும்.

இந்த மசோதா நிறைவேற்றப்படுவதை காண இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருப்பது? மகளிர் இடஒதுக்கீட்டை வரும் மக்களவைத் தேர்தலில் எளிதாக அமல்படுத்தலாம். இந்த மசோதா, இடஒதுக்கீடு பற்றியது அல்ல, மாறாக பாரபட்சம் மற்றும் அநீதியை அகற்றும் செயலாகும்.

இந்த மசோதா ‘நாரி சக்தி வந்தன் அதிநியம்’ என்று அழைக்கப்படுகிறது. எங்களுக்கு ‘சல்யூட்’ அடிப்பதை நிறுத்துங்கள். யாரும் எங்களுக்கு ‘சல்யூட்’ அடிக்க வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் பீடங்களில் அமர்த்தப்பட வேண்டும் என்றோ பிறர் எங்களை வழிபட வேண்டும் என்றோ நாங்கள் விரும்பவில்லை. சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம்.

ஆண் தைரியத்தை வெளிப்படுத்தினால் அதை நமது சமூகம் ஏற்கிறது. அதுவே ஒரு பெண் தனது தைரியத்தை வெளிப்படுத்தினால் அதை ஏற்க மறுக்கிறது. ஏன் பெண்கள் தைரியமானவர்களாக இருக்கக் கூடாது. பெண்கள் சுதந்திரத்துக்காக போராடவில்லையா? நமது நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தைரியமானவராக இருக்கவில்லையா? ஏன் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பெண் தலைவர்கள் தைரியமாகவும் முன்மாதிரியாகவும் இருக்கவில்லையா?

ஆம்.. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு வலிமையான தலைவர்தான். இதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x