Published : 20 Sep 2023 11:59 AM
Last Updated : 20 Sep 2023 11:59 AM

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது: மக்களவையில் சோனியா காந்தி பேச்சு

சோனியா காந்தி

புதுடெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மக்களவையில் உறுதிபட தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், "மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் இந்த மசோதாவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும். மக்களவையில் 82 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். மசோதா அமலுக்கு வரும்போது, இந்த எண்ணிக்கை 181 ஆக அதிகரிக்கும்" என்று தெரிவித்தார்.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி, "புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக ‘நாரி சக்தி வந்தன்’ (பெண் சக்திக்கு வணக்கம்) மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இந்தமசோதா மூலமாக மகளிருக்கு33 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். மகளிர் இடஒதுக்கீடு மசோதா 1996-ல் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பலமுறை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்ற முடியவில்லை. இந்திய பெண்களுக்கு அதிகாரம் அளிக்க, கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றே கருதுகிறேன். இந்திய தாய்மார்கள், சகோதரிகளின் கையில் அதிகாரத்தை அளிக்க வேண்டியது நமது கடமை. இந்த மசோதா மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுவடையும். மகளிர் இடஒதுக்கீடு மசோதாஅடுத்த சில நாட்களில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். அங்கு எங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. நாட்டின் நலன் கருதி, மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

இந்த மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் தொடங்கியது. விவாதத்தைத் தொடக்கிவைத்துப் பேசிய மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், "இந்த மசோதா பெண்களின் கண்ணியத்தையும், அவர்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யும். இந்த மசோதாவுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, "சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன்’ (பெண் சக்திக்கு வணக்கம்) மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் இது ஒரு உணர்வுப்பூர்வமான தருணம். பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கொண்டு வர முதல்முறையாக முயன்றவர் எனது கணவர் ராஜிவ் காந்தி. ஆனால், அந்த மசோதா மாநிலங்களவையில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதன் பிறகு பி.வி. நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், இன்று நாட்டில் 15 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள். இதன் மூலம் ராஜிவ் காந்தியின் கனவு ஓரளவு நனவானது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் இந்த சட்டம் நிறைவேறினால்தான் அவரது கனவு முழுமையாக நனவாகும்.

இந்த மசோதா நிறைவேறுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அதேநேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சிக்காலத்தில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகளாக இந்திய பெண்கள் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குக் காத்திருப்பது? இந்திய பெண்களை இவ்வாறு காத்திருக்க வைப்பது சரியா? இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். அதேநேரத்தில், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் SC, ST மற்றும் OBC சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x