Published : 20 Sep 2023 06:19 AM
Last Updated : 20 Sep 2023 06:19 AM

பாகிஸ்தான் பாடலை பார்த்து நகல் எடுத்த காங்கிரஸ்: மத்திய பிரதேச பாஜக குற்றச்சாட்டு

போபால்: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாடலைப் பார்த்து அப்படியே நகல் எடுத்து பாடல் வெளியிட்டு உள்ளது காங்கிரஸ் என்று மத்திய பிரதேச மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜன் ஆக்ரோஷ் என்ற பெயரில் யாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரைக்காக `சலோ சலோ சலோ காங்கிரஸ் கே சங்' என்ற பிரச்சாரப் பாடலையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பிரச்சாரப் பாடல் பாகிஸ்தான் நாட்டுப்பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக மத்தியபிரதேச பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சி) கட்சியின் பிரச்சாரப் பாடலில் இருந்து காங்கிரஸ் கட்சி சலோ சலோ பாடலை காப்பி அடித்துள்ளது.

இதன்மூலம் பாகிஸ்தான் மீதான காங்கிரஸ் கட்சியின் பாசம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மத்தியபிரதேச உள்துறை அமைச்சருமான நரோத்தம் மிஸ்ரா கூறும்போது, “காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பாடல், பாகிஸ்தானில் இருந்து திருடப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாச்சாஜான் (திக்விஜய் சிங்) செய்துள்ளார். பிரச்சாரப் பாடலை திருட வேண்டுமென்றால் கூட அவர்கள் அதை பாகிஸ்தானில் இருந்து திருடுகிறார்கள்’’ என்றார்.

அதேநேரத்தில் இதை காங்கிரஸ்கட்சி மறுத்துள்ளது. அக்கட்சியின் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் கே.கே.மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, “சலோ சலோ பாடல் தேசப்பக்தி பாடல்தான். மேலும் இந்தப் பாடலில் இந்திய ராணுவ வீரர்கள் பாடும் பாடலையும் சேர்த்துள்ளோம். மேலும் லகான் படத்தில் வரும் தேசப் பக்திப் பாடலையும் இதில் இணைத்துள்ளோம். பாகிஸ்தானில் இருந்து எந்தப் பாடலையும் நாங்கள் காப்பி அடிக்கவில்லை. காங்கிரஸ் மீது வேண்டுமென்றே வித்தியாசமான குற்றச்சாட்டை கூறியுள்ளார் மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸைப் பார்த்து பாஜகதான் காப்பி அடித்து பரிவர்த்தன் யாத்திரையை நடத்து கிறது என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

பழங்குடிகள் புறக்கணிப்பு: அவர் மேலும் கூறும்போது, “கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி நடத்தியுள்ளது. ஆனால் மக்களுக்காக எந்த நல்ல விஷயங்களையும் செய்யவில்லை. பழங்குடி மக்களை அவர்கள் முழுவதுமாக புறக்கணித்துவிட்டனர். இதனால் பாஜக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைப் பார்த்து அவர்கள்தான் காப்பி அடித்து பரிவர்த்தன் யாத்திரையை நடத்துகின்றனர். அது அவர்களுக்கு பலன் அளிக்காது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x