Published : 15 Sep 2023 12:14 PM
Last Updated : 15 Sep 2023 12:14 PM

மணிப்பூர் வன்முறையில் 4 மாதங்களில் 175 பேர் உயிரிழப்பு; 1,108 பேர் காயம் - போலீஸ் தகவல்

கோப்புப்படம்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் உயிரிழந்துள்ளனர். 1,108 பேர் காயமடைந்துள்ளனர், 32 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், 4,786 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், 386 வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து இம்பாலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய. ஐஜிபி (செயல்பாடு) ஐ.கே.முய்வா கூறுகையில், "மணிப்பூரில் தற்போதுள்ள நிலைமையில் மாநிலத்தில் மீண்டும் அமைதியை கொண்டுவர காவல்துறை, மத்திய படை, அரசு நிர்வாகம் 24 மணி நேரமும் பாடுபடுகிறது என்று பொது மக்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.

கலவரத்தின்போது கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களில் 1,359 துப்பாக்கிகளும், 15,050 வெடி மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 5,712 தீ வைப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 254 சர்ச்கள், 132 கோயில்கள் என 386 வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பிஸ்னுபூர் மாவட்டம் இகாய் முதல் சுராசந்த்பூர் மாவட்டம் கங்க்வாய் வரையிலான பகுதிகளில் பாதுகாப்புத் தடைகள் அகற்றப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் பாதுகாப்பு நீடிக்கிறது" என்று தெரிவித்தார்,

ஐஜிபி (நிர்வாகம்) கே.ஜெயந்தா கூறுகையில், "இதுவரை 175 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 76 உடல்கள் உரிமைகோரப்பட்டுள்ளன. இன்னும் 96 உடல்கள் உரிமை கோரப்படவில்லை. இதில் இம்பாலில் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனையில் 28 உடல்களும், ஜெஎன்ஐஎம்எஸ் மருத்துவமனையில் 26 உடல்களும், சுராசந்த்பூரில் உள்ள மருத்துவமனையில் 42 உடல்களும் வைக்கப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பாக 9,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

மேலும் ஐஜிபி (பிரிவு -3) நித்திஷ் உஜ்வால் தேசிய நெடுஞ்சாலை -32 மற்றும் தேசிய நெடுஞ்சாலை -2 ஆகியவை இயல்பாக பயன்பாட்டில் உள்ளன என்று தெரிவித்தார்.

மே 3-ல் தொடங்கிய வன்முறை: மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாகா, குகி போன்றவர்களை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 53 சதவீதம் இருக்கும் மைத்தேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3 ஆம் தேதி நடந்த பழங்குடியினர் அமைதிப் பேரணியில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது. வன்முறையில் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது.

வன்முறையைக் கட்டுப்படுத்த மாநில அரசு, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படையினரை வரவழைத்தது. இந்த வன்முறையில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x