Published : 09 Sep 2023 05:00 AM
Last Updated : 09 Sep 2023 05:00 AM

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு இன்று தொடக்கம் - அமெரிக்க அதிபருடன் மோடி ஆலோசனை | முழு விவரம்

புதுடெல்லி: ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்துள்ள தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். போர் விமான இன்ஜின் தயாரிப்பு, ட்ரோன் கொள்முதல், 5ஜி, 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் கூட்டாக செயல்படுவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை. இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, பிரதமர் மோடி நேற்று தனது சமூகவலைதள பதிவில் கூறியுள்ளதாவது:

‘உலகம் ஒரே குடும்பம்’: ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. பிரம்மாண்டமாக நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு, மக்களை மையமாக கொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சியில் புதிய பாதையை வகுக்கும். உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கும் இந்த உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்தியா தலைமையில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் ‘வசுதைவ குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’. இது ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்ற உலகளாவிய பார்வையை வெளிப்படுத்துகிறது. இக்கருத்தை மையமாக கொண்ட மாநாட்டுக்கு தலைமை வகிப்பதில் பெருமை கொள்கிறேன். இதில் உலகமக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.ஒருங்கிணைந்த, நடுநிலையான வளர்ச்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்குகளுக்கான முன்னேற்றம், எதிர்காலத்துக்கான பசுமை வளர்ச்சி ஒப்பந்தம், 21-ம் நூற்றாண்டுக்கான பன்முக அமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

தொழில்நுட்ப பரிமாற்றம், டிஜிட்டல் பொது கட்டமைப்பு போன்ற எதிர்கால துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், உலக அமைதியை உறுதி செய்யவும் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகிறோம்.

மகாத்மா காந்தியின் அணுகுமுறை: பின்தங்கியவர்களுக்கும் சேவை செய்யும் மகாத்மா காந்தியின் அணுகுமுறையை பின்பற்றுவது முக்கியம். நட்புறவு, ஒத்துழைப்பை பலப்படுத்த பல நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.

இந்த உச்சி மாநாட்டுக்கு வரும் நமது விருந்தினர்கள், இந்தியாவின் உற்சாக விருந்தோம்பலால் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன். ஜி20 நிறைவு விழாவில், உலகத் தலைவர்கள் ஒரு குடும்பமாக இணைந்து ஆரோக்கியமான உலகுக்கு, ஒரே எதிர்காலத்துக்கான தங்களின் கூட்டு தொலைநோக்கை பகிர்ந்து கொள்வார்கள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு டெல்லி வந்தடைந்தார். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவரை மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். பின்னர், லோக் கல்யாண் மார்க்சாலையில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்துக்கு அதிபர் பைடன் சென்றார். அவரை மோடி வரவேற்றார்.

பிறகு, அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். போர் விமான இன்ஜின் தயாரிப்பு ஒப்பந்தம், ட்ரோன்கள் கொள்முதல், 5ஜி மற்றும் 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் கூட்டாக செயல்படுவது, சர்வதேச விவகாரங்கள் உட்பட பல விஷயங்கள்குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கிடையே, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்தஇங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஓமன் பிரதமர் சுல்தான் ஹைதம் பின்தாரிக் அல் சயீத், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குத்தேரஸ், தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில்ரமபோசா ஆகியோருக்கும் உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபிறகு, ஜோ பைடன் இந்தியா வருவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர்கள் தங்கியுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x