Published : 07 Sep 2023 02:24 PM
Last Updated : 07 Sep 2023 02:24 PM

நாடாளுமன்ற சிறப்புக் கூட்ட நிகழ்ச்சி நிரல் விவகாரம்: ஜெயராம் ரமேஷுக்கு பிரஹலாத் ஜோஷி பதிலடி

பிரஹலாத் ஜோஷி | கோப்புப் படம்

புதுடெல்லி: நாடாமன்ற சிறப்புக் கூட்டத் தொடருக்கான நோக்கம் குறித்து தெரிவிக்காதது குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பதில் அளித்துள்ளார்.

ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படும்போதெல்லாம் அதற்கான நிகழ்ச்சி நிரல் முன்கூட்டியே தெரிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், வரும் 18-ம் தேதி முதல் 5 நாட்களுக்குக் கூடவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கான நிகழ்ச்சி நிரல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதன்மூலம், மோடி அரசு நாடாளுமன்றத்தை அவமதிக்கிறது. இதற்கு முன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டங்கள் நடைபெற்றபோது அதற்கான நிகழ்ச்சி நிரல் தெரிவிக்கப்பட்டது. பாஜக அரசும் அப்படி அறிவித்து நாடாளுமன்றத்தைக் கூட்டி உள்ளது.

உதாரணத்துக்கு, ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்துவதற்காக ஜூன் 30, 2017-ல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் அதன் மைய மண்டபத்தில் கூட்டப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் திரும்பப் பெற்றதை அடுத்து, ஜூலை 2008-ல் சிறப்பு அமர்வு நடைபெற்றது. இதேபோல், நாடு சுதந்திரம் அடைந்ததன் 50-ம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் நோக்கில் 1997, ஆகஸ்ட் 26 அன்று சிறப்பு அமர்வு கூடியது.

மக்களவை களைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இரண்டு சிறப்பு அமர்வுகள் நடந்துள்ளன. ஹரியாணாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் பெறுவதற்காக 1991, ஜூன் 3-ம் தேதி மாநிலங்களவை கூடியது. தமிழ்நாடு மற்றும் நாகாலாந்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்காக 1977 பிப்ரவரியில் மாநிலங்களவை சிறப்பு அமர்வு கூடியது.

இதேபோல், அரசியல் சாசனத்தின் 70-ம் ஆண்டை முன்னிட்டு 2019, நவம்பர் 26-ல் சிறப்பு அமர்வு கூடியது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ம் ஆண்டை முன்னிட்டு 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி சிறப்பு அமர்வு கூடியது. இதேபோல், மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியதன் 60-ம் ஆண்டை முன்னிட்டு 2012 மே 13-ம் தேதி சிறப்பு அமர்வு கூடியது. இவ்வாறு சிறப்பு அமர்வு கூடியபோதெல்லாம், அதன் நிகழ்ச்சி நிரல் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, "ஜெய்ராம் ரமேஷின் சமீபத்திய அறிக்கை மிகவும் தவறானது. அவர் அரசியலமைப்பு விதிகள் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகள் பற்றிய உண்மைகளை திரித்து வருகிறார். 30 ஜூன் 2017 அன்று, ஜிஎஸ்டி நடைமுறைக்காக, சென்ட்ரல் ஹாலில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் என்று ஜெயராம் ரமேஷ் பொய் கூறி இருக்கிறார். அது, அரசியலமைப்பின் 85-வது பிரிவின் கீழ் ஒரு அமர்வு அல்ல. நாடாளுமன்றத்தையும் அதன் நடைமுறைகளையும் அவதூறு செய்யும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. அரசியலமைப்பின் 85-வது பிரிவு நாடாளுமன்ற அமர்வு குறித்து தெளிவாக தெரிவிக்கிறது. நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு ஏற்ப நிகழ்ச்சி நிரல் பகிரப்படும்.

அரசியலமைப்பின் 70-வது ஆண்டு விழாவுக்காக 26 நவம்பர் 2019 அன்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் சிறப்பு அமர்வு நடந்ததாக ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுவும் உண்மையல்ல. இது அரசியலமைப்பின் 85-வது பிரிவின் கீழ் ஒரு நாடாளுமன்ற அமர்வு அல்ல. கொண்டாட்ட செயல்பாடுகளுக்கும் முறையான நாடாளுமன்ற அமர்வுகளுக்கும் இடையே வேறுபாடு காண்பது முக்கியம். நமது ஜனநாயக செயல்முறைகளின் ஒருமைப்பாட்டைப் பேணுவதில் துல்லியமான தகவல் முக்கியமானது. துல்லியமான தகவல்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அரசியலமைப்பு விதிகள் குறித்தும், நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்தும் தவறான புரிதலை ஏற்படுத்தும்படியாக அறிக்கைகள் வெளியிடக்கூடாது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கும் சிதைப்பதற்கும் பெயர் பெற்ற அரசு காங்கிரஸ் அரசுதான் என்பதை வரலாறு நிரூபிக்கிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 1975-ல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டதை மக்கள் மறக்கவில்லை. மக்கள் மற்றும் நிறுவனங்களின் உரிமைகள் உங்கள் அரசால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டன என்பதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். சட்டப்பிரிவு 356-ஐ தவறாகப் பயன்படுத்தி ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 90 முறைக்கு மேல் பதவி நீக்கம் செய்ததில் காங்கிரஸ் அரசுக்கு நிகர் வேறில்லை" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x