Published : 07 Sep 2023 02:01 PM
Last Updated : 07 Sep 2023 02:01 PM

“வெறுப்பு ஒழிக்கப்படும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும்” - ராகுல் காந்தி

ராகுல் காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி: வெறுப்பு ஒழிக்கப்பட்டு இந்தியா ஒன்றுபடும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும் என்று காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவை நினைவுகூர்ந்துள்ள ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கடந்த ஆண்டு (2022) இறுதியில் கன்னியாகுமரியில் தொடங்கி இந்தாண்டு (2023) தொடக்கத்தில் காஷ்மீரில் நிறைவடைந்த சுமார் 4,000 கிமீ தூரம் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் மாண்டேஜ் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிந்துள்ள ராகுல் காந்தி, இந்தியில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், அன்பினையும், ஒற்றுமையினையும் நோக்கி நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் கோடிக்கணக்கான பாதச்சுவடுகள் நாளைய சிறந்த நாட்டுக்கு அடித்தளமிட்டுள்ளது.

வெறுப்புகள் அழிக்கப்படும் வரை, இந்தியா ஒன்றுபடும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும். இது எனது வாக்குறுதி" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் கடந்த 2022 ஆண்டு செப். 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தனது இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். அங்கிருந்து கேளரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா எனத் தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்தார். இந்த யாத்திரையின் போது, ராகுல் காந்தி 12 பொதுக்கூட்டங்கள், 100க்கும் அதிகமான தெருமுனைக் கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்புகளில் கலந்து கொண்டார். அதேபோல், 275 திட்டமிடப்பட்ட நடைபயண உரையாடல்களை நடத்தினார்.

சுமார் 4,000 கி.மீ., தூரம் கொண்ட இந்த நடைபயணத்தின் மூலம் ராகுல் காந்தி அடையாளம் மாறியது. அதுவரை, தயக்கம் நிறைந்த பகுதி நேர அரசியல்வாதியாக பார்க்கப்பட்டவர் மிகவும் முதிர்ச்சி அடைந்தவராக மாறினார். அவரது எதிரிகளால் தவிர்க்க முடியாதவராக பார்க்கட்டார் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்களின் கவனத்தை ராகுல் காந்தி தன் பக்கம் ஈர்த்தார்.

ராகுல் காந்தியின் இந்த யாத்திரையின் போது, கமல்ஹாசன், பூஜா பட், ரியா சென், ஸ்வரா பாஸ்கர், ரேஷ்மி தேசாய், அகன்ஷா பூரி, அமோல் பால்கர் போன்ற திரைத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறை பிரபலங்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள பிரபலங்களும் ராகுல் காந்தியுடன் இணைந்து நடந்தனர்.

அதேபோல், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் தீபக் கபூர், ஓய்வு பெற்ற கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் எல். ராம்தாஸ், ஆர்பிஐயின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், முன்னாள் நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் போன்ற முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள் போன்றோரும் யாத்திரையில் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த பரூப் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெகபூபா முஃப்தி, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஆதித்ய தாக்கரே, பியங்கா சதுர்வேதி, சஞ்சய் ரவுத், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x