

குடியரசுத் தலைவர் அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக ‘பாரத்’ : ஜி20 விருந்து அழைப்பிதழில் ‘பிரசிடென்ட் ஆஃப் பாரத்’ (President of Bharat) என அச்சிட்டிருப்பதை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் மாநிலங்களின் ஒன்றியம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதேபோல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் தேதி இரவு விருந்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்க இருக்கிறார். இதற்கான அழைப்பிதழில் ‘President of Bharat’ என அச்சிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், "அந்தச் செய்தி உண்மைதான். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி செப்டம்பர் 9 நடைபெறும் இரவு விருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வந்துள்ளது. அதில் வழக்கத்துக்கு மாறாக ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், "மாநிலங்களின் ஒன்றியம் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர்கள் ஸ்டாலின், கேஜ்ரிவால் கருத்து: இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,"பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு இண்டியா என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"சில கட்சிகளின் கூட்டணி இந்தியாவாக மாறினால், நாட்டின் பெயரை மாற்றுவார்களா? நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது. ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல. இண்டியா கூட்டணி தங்கள் கூட்டணியின் பெயரை பாரத் என மாற்றினால், இவர்கள் என்ன நாட்டின் பெயரை பாஜக என மாற்றுவார்களா? இது என்ன நகைச்சுவையாக உள்ளதே?” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "நமது அரசியலமைப்பில், 'இந்திய அரசியலமைப்பு' என்பது இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வார்த்தை. மாறாக, 'பாரத்' என்பது தேவையில்லை என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "பாரத் என்ற வார்த்தை நாம் சொல்வதுதான். இதில் புதிதாக என்ன இருக்கிறது? ஆனால், 'இந்தியா' என்ற பெயர் உலகம் அறிந்தது. திடீரென்று என்ன நடந்தது, ஏன் நாட்டின் பெயரை மாற்ற வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
‘பாரத்’ விவகாரம்: வெளியுறவுத் துறை கருத்து தெரிவிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என உள்ளது குறித்து கருத்து தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. அதேநேரத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றும் திட்டம் இருப்பதாக பரவும் தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.
“இது மனதுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி”: இந்தியா என்ற வார்த்தைக்குப் பதில் பாரதம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இது மனதுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். இதேபோல் மேலும் சில மத்திய அமைச்சர்களும், பாஜக பிரமுகர்களும் வரவேற்றுள்ளனர்.
இதனிடையே, பாரத தேசம் என்பது பெருமை சேர்க்கும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றுவதை வரவேற்கிறோம் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமியும் தெரிவித்துள்ளார்.
அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது சரியல்ல: ஐகோர்ட்: “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல’ என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.
உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்: “சனாதனம் குறித்து தவறாகப் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுத்தத் தவறிய தமிழக அரசு மீது தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், அரசு அதிகாரிகள், ஆயுதப்படை ஊழியர்கள் உள்ளிட்ட 260 பேருக்கும் மேற்பட்டோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
இதனிடையே, சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்துக்கு போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டது.
உதயநிதியின் பேச்சு: அதிமுக விமர்சனம்: சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு வெறுக்கத்தக்கது என்றும், எந்த மதத்தைச் சேர்ந்த மக்களும் அதை விரும்ப மாட்டார்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
ODI WC 2023 - இந்திய அணி அறிவிப்பு: அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கு அப்டேட்: பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.