சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு வெறுக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு வெறுக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Updated on
2 min read

சென்னை: சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு வெறுக்கத்தக்கது என்றும், எந்த மதத்தைச் சேர்ந்த மக்களும் அதை விரும்ப மாட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திராவிடம் என்று கூறுவார்கள், பிறகு சனாதனம் என்று கூறுவார்கள். இதை இரண்டையும் கூறி திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. இதுபோன்ற செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள். அவரது பேச்சு வெறுக்கத்தக்க ஒன்று. உண்மையில் இது ஒரு திசை திருப்புகின்ற முயற்சி.

தமிழகத்தில் பல பிரச்சினைகள் கொழுந்து விட்டு எரிகின்றன. அவற்றின் மீது மக்களின் கவனம் திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவே, திசைதிருப்புகின்ற முயற்சியாக சனாதனத்தை உதயநிதி கையில் எடுத்திருக்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் நல்ல விஷயம். 1952-ல் ரூ.11 கோடி செலவில் தேர்தல் நடத்தபட்டது. நடந்து முடிந்த தேர்தலில் ரூ. 60,000 கோடி செலவானது. ரூ.11 கோடி எங்கே, ரூ.60 ஆயிரம் கோடி எங்கே? இவை அனைத்தும் யாருடைய பணம்? உதயநிதியின் பணமா அல்லது முதல்வர் ஸ்டாலினின் பணமா? மக்களுடைய வரிப்பணம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் திமுக ஏன் பயப்படுகிறது? எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வையுங்கள், மீண்டும் எங்கள் ஆட்சிதான் வரும் என்று சொல்ல வேண்டியது தானே? அவர்களால் சொல்ல முடியாது.

இப்போது நான் சொல்கிறேன், 2024ம் ஆண்டில் அல்ல நாளைக்கே தேர்தல் வைத்தாலும் தமிழகத்தில் மீண்டும் அதிமுகவின் ஆட்சிதான் மலரும். அதை எங்களால் உறுதியாகக் கூற முடியும். ஆனால், உங்களால் உறுதியாகக் கூற முடியுமா? இப்போது தேர்தல் வைத்தால் திமுக நிரந்தரமாக வீட்டுக்குப் போய்விடும். ஏற்கனவே, திமுக-வை எம்ஜிஆர் 13 வருடங்கள் வனவாசம் அனுப்பினார். ஜெயலலிதா 10 வருடங்கள் வனவாசம் அனுப்பினார்.

2021 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை நூலிழையில் வெற்றிவாய்ப்பை நாங்கள் இழந்துவிட்டோம். 3 சதவீதம் மட்டுமே கூடுதலாகப் பெற்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று திமுக ஆட்சி அமைத்தது. அதிமுகவில் யாரும் கை வைக்க முடியாது. எங்களுக்கு இருக்கிற அடிப்படை ஓட்டு பலமாக இருக்கிறது. இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போடுகின்ற அந்த கை எந்தக் காலத்திலும் மாறாது.

இப்போது ஏழை, எளியோர், ஆதிதிராவிடர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் என அனைத்து மக்களும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களது ஓட்டு நிச்சயமாக இந்த ஆட்சிக்கு எதிராக திரும்பி எங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். அதிமுகவை அழித்துவிடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். இவரது தாத்தா கருணாநிதியாலேயே அது முடியவில்லை. அவருடைய மகன் முதல்வர் மு.க.ஸ்டாலினாலும் முடியவில்லை.

உதயநிதி ஸ்டாலின் ஒரு கத்துக்குட்டி. ஆயிரம் கத்துக்குட்டிகள் வந்தாலும், ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாட்டை 31 ஆண்டுகள் ஆண்ட கட்சி என்றால் அது அதிமுகதான். கடந்த 2021 தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால், திமுக அத்துடன் காணாமல் போயிருக்கும்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in