Published : 26 Dec 2017 01:32 PM
Last Updated : 26 Dec 2017 01:32 PM

மதச் சார்பின்மை பற்றி மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு: மன்னிப்பு கோர காங்கிரஸ் வலியுறுத்தல்

மதச் சார்பின்மை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மத்திய வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணையமைச்சராக பதவி வகிப்பவர் அனந்தகுமார் ஹெக்டே. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அவர், அங்கு குக்கனூர் என்ற இடத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:

‘‘மதச் சார்பின்மைவாதிகள், முற்போக்காளர்கள் என கூறிக் கொள்பவர்கள், உண்மையில் தங்கள் பெற்றோர் மற்றும் தங்கள் ரத்தத்தின் அடையாளம் இல்லாதவர்கள். இதுபோன்ற அடையாளம் மூலம்தான் ஒருவர் சுயமரியாதையைப் பெற முடியும். சிலர் தங்களை முஸ்லிம், கிறிஸ்தவர், பிராமணர், லிங்காயத், இந்து என அடையாளப்படுத்திக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் சிலர் மதச் சார்பற்றவர்கள் என கூறும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது.

நமது அரசியல் சட்டத்தைப் பொறுத்தவரை, காலத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும். பாஜக அரசு விரைவில் அந்தப் பணியில் ஈடுபடும். மனு தர்மம் பற்றி பலர் கூறுகிறார்கள்; அது தற்போது வழக்கொழிந்து விட்டது. முற்போக்காளர்களுக்கு வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் என எதுவும் கிடையாது. அவர்கள் தங்களிடம் தவறுகளை வைத்துக் கொண்டு பிறரது தவறுகளை சுட்டிக்காட்டி குற்றம்சாட்டுகின்றனர்'' எனக் கூறினார்.

அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேயின் சர்ச்சைப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த அம்மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளதாவது:

''உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனந்தகுமார் ஹெக்டே போன்றவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்காக, அனந்தகுமார் மக்களை பிரித்தாளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்ற பேச்சுக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும். அவரத பேச்சில் உடன்பாடு உள்ளதா? என்பதை பாஜக தலைமை தெளிவுபடுத்த வேண்டும். அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்'' எனக் கூறினார்.

முன்னதாக இதுபற்றி முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

''மத்திய அமைச்சர் பதவி வகிப்பதற்கு அனந்தகுமார் ஹெக்டே தகுதி இல்லாதவர். பொதுச்சபையில் பொறுப்புடன் பேசும் பண்பாடு இல்லாதவர். பஞ்சாயத்து உறுப்பினராக பதவி வகிக்க கூட லாயக்கற்றவர்'' எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x