Published : 14 Dec 2017 11:19 AM
Last Updated : 14 Dec 2017 11:19 AM

ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைந்தது

 ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பல் இன்று (வியாழன்)  முறைப்படி கடற்படையில் இணைந்தது. பிரதமர் மோடி இந்தக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப உரிமம் பெற்று, மும்பை மட்கானில் உள்ள கப்பல் கட்டுமானத் தளத்தில் 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

இதில் முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் கல்வாரி. இந்த நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு முடிந்து கடந்த 2015 ஏப்ரல் 6-ல் முதல்முறையாக வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல் 67.5 மீட்டர் நீளமும் 12.3 மீட்டர் உயரமும் கொண்டது.

அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலை, ரேடாரால் கண்காணிக்க முடியாது. அதிக சப்தமின்றி பயணிக்கும் திறன் கொண்டதுடன், ஆழ்கடலில் இருந்து அதிநவீன ஏவுகணைகளை செலுத்தும் வசதியும் உள்ளது.  முதல் நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானங்கள் முடிந்து, மூன்று மாதங்களாக பல்வேறு சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த நீர்மூழ்கி இன்று (வியாழன்) முறைப்படி கடற்படையில் இணைந்தது. மும்பையில் இன்று நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது அவர் பேசுகையில் "கடல் வழியாக நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள், போதை மருந்து கடத்தல், சட்டவிரோத மீன் பிடிப்பு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள இந்த நீர்மூழ்கி கப்பல் பேருதவியாக இருக்கும். நமது கடற்பகுதி பாதுகாப்பு அதிகரிக்கும். இந்திய கடற்படையில் இந்த கப்பல் இணைந்துள்ளதன் மூலம் அதன் வலிமை அதிகரித்துள்ளது" என பிரதமர் மோடி கூறினார்.

விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் "இந்திய பெருங்கடலில் இனிமேல் அமைதி அதிகரிக்கும். கடல் வணிகம் அச்சுறுத்தல் இன்றி நடைபெறும்"  எனக் கூறினார். மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x