

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பு - மத்திய அரசு: வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், "வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளிகளும் பயன்பெறும் வகையில் சிலிண்டரின் விலையில் ரூ. 200 குறைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார். ஓணம் மற்றும் ரக்ஷா பந்தனை முன்னிட்டு நமது நாட்டின் பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு இது” என்று தெரிவித்துள்ளார்.
ஓணத்துக்கு பரிசு, தண்டனை எதற்கு? - சிபிஐ கேள்வி: இதனிடையே ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைத்தது ஓணத்துக்கான பரிசு என்றால், 830 ரூபாயை படிப்படியாக ஏற்றியது எதற்காக கொடுக்கப்பட்ட தண்டனை என்பதை ஒன்றிய அரசு சொல்ல வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நினைவுப்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.
‘தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது’:கர்நாடகா: தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 15 நாட்களுக்கு 5000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில அமைச்சர் எம்.பி.பாடீல், "காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், எங்களிடம் தண்ணீர் இல்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவு நிறைவேற்ற முடியாத ஒன்று. எனவே, நாங்கள் சட்ட வழியைப் பின்பற்ற உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காவிரியில் விநாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடக் கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
‘3,000 மருத்துவப் பணியாளர்களுக்கு பணி ஆணை’:அமைச்சர்: இன்னும் சில மாதங்களில் 3,000க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் பணிஆணையினை வழங்குவார் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு: அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பப் பெண்களை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டா விவகாரமும் ஆய்வுக்குழு பரிந்துரைகளும்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பயிற்சி மையங்களில் நடந்த தற்கொலைகளைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை ஆராய அமைக்கப்பட்ட குழு, பயிற்சி மையங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது. அதில் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க வேடிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது, தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வீடியோக்களை பதிவேற்றுவது, பாடத்திட்டங்களை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை பயிற்சி மையங்கள் எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கம் மட்டுமே போதுமானதாகாது: மூடிஸ்: இந்தியாவில் அதிகரித்துவரும் மக்கள் தொகை தொழிலாளர் பங்களிப்பை அதிகரிக்கும் என்றாலும்கூட அதுமட்டுமே பொருளாதாரத்தை வலுவானதாக்கிவிட போதுமானதாக இருக்காது. அதற்கு இங்குள்ள கற்றல் விளைவின் தரமும் ஒரு காரணமாகும் என்று கடன்தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா வெளியிட்ட வரைபடத்தால் சர்ச்சை: சீன அரசு திங்கள்கிழமை தங்கள் தங்கள் நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது. அதில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் முழுவதும் தனது வரைபடத்தில் இணைத்ததோடு, அக்ஷய் சின் பிராந்தியம் சீனாவின் எல்லைகளுக்கு உட்பட்டதுபோல் காட்டப்பட்டுள்ளது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
இம்ரான் கானின் தண்டனைக்கு இடைக்காலத் தடை: அரசு கருவூலப் பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.