Published : 14 Dec 2017 11:16 AM
Last Updated : 14 Dec 2017 11:16 AM

93 தொகுதிகளில் குஜராத்தில் இன்று 2-ம் கட்ட தேர்தல்: வரும் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வரும் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 1,838 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 68 சதவீத வாக்குகள் பதிவாயின.

இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 851 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.22 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்றைய தேர்தலில் துணை முதல்வர் நிதின் படேல் (மேசனா) களம் காண்கிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஜீவாபாய் படேல் போட்டியிடுகிறார். பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவரான அல்பேஷ் தாகுர் காங்கிரஸ் சார்பில் ரத்தன்பூரில் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக பாஜக சார்பில் லவிங்ஜி தாகுர் களம் காண்கிறார்.

வட்கம் தொகுதியில் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் விஜய் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். கடந்த மாதம் இமாச்சல் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த 2 மாநிலங்களில் பதிவான வாக்குகளும் வரும் 18-ம் தேதி எண்ணப்பட உள்ளன. அன்று மதியமே முடிவு தெரிந்துவிடும். வரும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால் தேர்தல் முடிவு மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x