Last Updated : 24 Aug, 2023 05:33 AM

 

Published : 24 Aug 2023 05:33 AM
Last Updated : 24 Aug 2023 05:33 AM

நிலவில் வெற்றிகரமாக இறங்கியது சந்திரயான்-3: தென்துருவத்தை சென்றடைந்த முதல் நாடு எனும் புதிய சரித்திரம்

சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதை காட்டும் படம். படம்: பிடிஐ,

சென்னை: சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர்கலன் நிலவில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் புதிய சரித்திரத்தை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.250 கோடியில் வடிவமைத்தது. இது 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கனவே சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவை சுற்றிவருவதால் இம்முறை விண்கலத்தில் லேண்டர், ரோவர் பாகங்கள் மட்டும் இடம்பெற்றன.

ஜூலை 14-ல் தொடங்கிய பயணம்: சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 16 நிமிடங்களில் திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலத்தை எல்விஎம்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

ஆக.1-ம் தேதி சந்திரயான்-3 புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. 5 நாள் பயணத்துக்கு பிறகு ஆக.5-ம் தேதி நிலவின் ஈர்ப்பு விசைப்பகுதிக்குள் சந்திரயான் நுழைந்தது. அதன்பின் நிலவின் சுற்றுப்பாதையில் வலம்வந்த விண்கலத்தின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு அருகே விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து சந்திரயானின் உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் ஆக.17-ம் தேதி பிரிக்கப்பட்டது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அனைத்துகட்ட முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டு சந்திரயான்-3 நேற்று மாலை நிலவில் தரையிறங்க தயாரானது. அதற்கான பணிகள் நேற்று மாலை 5.44 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு மையத்தில் இருந்து நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மணிக்கு 6,000 கி.மீ. வேகம்: நிலவில் இருந்து 25 கி.மீ. உயரத்துக்கு வந்தபோது, லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கணினி வாயிலாக தரையிறங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது லேண்டரின் வேகம் மணிக்கு 6,000 கி.மீ. என்ற அளவில் இருந்தது. எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி அதன் வேகத்தை குறைக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்காக லேண்டரின் கால்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 4 திரவ இயந்திரங்களும் சீரான நிலையில் சுமார் 10 நிமிடங்கள் இயக்கப்பட்டன. அதன்மூலம் விண்கலத்தின் வேகத்தை 1,200 கி.மீ அளவுக்கு குறைத்து லேண்டர் 7.4 கி.மீ உயரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இவ்வாறு லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு தரையில் இருந்து 800 மீட்டர் உயரத்தை வந்தடைந்ததும், அதுவரை சாய்ந்தவாறு இருந்த விண்கலத்தின் கால்கள் தரையிறங்குவதற்கு ஏதுவாக செங்குத்தாக கீழ்நோக்கி நேராக திருப்பப்பட்டது.

அதேநேரம், லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு கணினி, விண்கலத்தில் உள்ள கேமரா மூலம் நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து சரியான இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையை உறுதிசெய்தது. அதன்பின் அந்தப் பாதையில் பயணத்தை தொடர்ந்த லேண்டர் தனது திரவ இயந்திரங்களின் விசையை குறைத்து 150 மீட்டர் உயரத்துக்கு வந்தது. இந்த கட்டத்துக்கு வந்ததும் லேண்டர் அப்படியே சில விநாடிகள் நிறுத்திவைக்கப்பட்டது. அப்போது நிலவின் ஈர்ப்பு விசையால் லேண்டர் கீழே இழுக்கப்படாமல் இருக்க அதன் கால்களில் உள்ள இயந்திரங்கள் மூலம் மேல்நோக்கிய தள்ளுவிசை கொடுக்கப்பட்டது.

சமதள பரப்பு ஆய்வு: இந்த சூழலில், விண்கலத்தில் இருந்த ‘இடர் உணர் ஆபத்து தவிர்ப்பு கேமரா’ உதவியால், தரையிறங்க வேண்டிய பகுதியை ஆராய்ந்து, அதில் பாதுகாப்பான ஒரு சமதள பரப்பு தேர்வு செய்யப்பட்டது. அதன்பின் 150 மீட்டரில் இருந்து 60 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் இறக்கப்பட்டது. அதில் இருந்த லேசர் டாப்ளர் வெலாசிட்டி சென்சார் வாயிலாக விண்கலம் எவ்வளவு வேகத்தில் கீழ்நோக்கிச் செல்கிறது என்பதையும் கணக்கிட்டு தரையிறங்க ஏதுவான வேகமும் கட்டுக்குள் வைக்கப்பட்டது.

அடுத்ததாக லேண்டர் 10 மீட்டர் உயரத்துக்கு கொண்டு வரப்பட்டதும், நிலவின் மேற்பரப்பில் இருந்து புழுதி மேல் எழும்புவதை தவிர்க்க, திரவ இயந்திரங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. மிகவும் பரபரப்பான அபாயக் கட்டத்தை கடந்து, மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்துக்கு அருகே மான்சினஸ் சி மற்றும் போகுஸ்லாவ்ஸ்கி பள்ளங்களுக்கு இடையே லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.

அடுத்த சில நிமிடங்களில், ‘நான் இலக்கை அடைந்துவிட்டேன்.. நீங்களும்தான்’ என்று இஸ்ரோவுக்கு லேண்டர் குறுஞ்செய்தி அனுப்பியதும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உட்பட ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு மற்றும் தென் துருவத்துக்கு சென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று புதிய சகாப்தம் படைத்துள்ளது.

பூமிக்கும், நிலவுக்கும் இடையே உள்ள 3.84 லட்சம் கி.மீ. தூரத்தை சந்திரயான்-3 விண்கலம் 41 நாட்களில் சென்றடைந்துள்ளது. நிலவில் ஹீலியம் போன்ற வாயு மூலக்கூறுகள், நிலவு உருவான விதம், பனிக்கட்டிகளின் நிலை, தனிமங்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்வதே இத்திட்டத்தின் முக்கிய பணியாகும்.

லேண்டரில் இருந்து ரோவர் வாகனம் வெளியேறிய பிறகு, நிலவில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். லேண்டர், ரோவர் வழங்க உள்ள அரிய தகவல்கள் மூலம் நிலவு பற்றிய பல்வேறு தகவல்கள் தெரியவரும் என்று அறிவியல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சோம்நாத்துக்கு பிரதமர் வாழ்த்து: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்தை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினார். அப்போது அவர் "உங்கள் பெயர் சோம்நாத். சோம்நாத் என்றால் நிலா என்று பொருள். உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் வாழ்த்துக்கள். உங்களை விரைவில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பேன்" என்றார்.

சோம்நாத் பேசும்போது "டியர் பிரதமர் சார், நிலவில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிவிட்டோம். இந்தியா இப்போது நிலவில் அடியெடுத்து வைத்துள்ளது. இஸ்ரோவின் தலைமை மற்றும் விஞ்ஞானிகளின் சிறப்பான பணியே இந்த வெற்றிக்கு காரணம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x