Last Updated : 20 Dec, 2017 09:49 AM

 

Published : 20 Dec 2017 09:49 AM
Last Updated : 20 Dec 2017 09:49 AM

முத்தலாக் நடைமுறையை தடை செய்ய வழிவகுக்கும் சட்ட மசோதாவை எதிர்க்க வேண்டும் - எதிர்க்கட்சிகளுக்கு உபி முஸ்லிம் மவுலானாக்கள் கோரிக்கை

முத்தலாக் நடைமுறையை தடை செய்ய வழிவகுக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு உத்தரபிரதேச முஸ்லிம் மவுலானாக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை முஸ்லிம் ஆண்கள் பின்பற்றி வந்தனர். இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகள் தொடுத்த வழக்கில், முத்தலாக் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் முத்தலாக் முறையை தடை செய்ய சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், ‘முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு (திருமண உரிமைகளின் பாதுகாப்பு) சட்டம் 2017’ என்ற மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என உத்தரபிரதேச முஸ்லிம் மவுலானாக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக ராகுல் காந்தி, அகிலேஷ் சிங் யாதவ், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய தன்சீம் உலாமா-எ-இஸ்லாம் அமைப்பின் பொதுச்செயலாளர் மவுலானா சஹாபுதீன் ரஜவி ‘தி இந்து’விடம் கூறும்போது, “முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் புதிய சட்டத்தை நிறைவேற்றினால் குடும்பத்தில் மோதல் உருவாகும். பெரும்பாலான குடும்பங்களில், அதன் தலைவர் மட்டுமே சம்பாதிப்பவராக உள்ளார். இவர் முத்தலாக் கூறி சிறைக்கு சென்றால் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள். முத்தலாக் கூறி விவாகரத்து செய்த பின்பும் அதே கணவருடன் வாழ வேண்டிய கட்டாயம் மனைவிகளுக்கு ஏற்படும். இந்தக் கருத்துகளை விளக்கி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன்” என்றார்.

இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிச்சட்ட வாரியத்தின் தலைவர் ஷாயிஸ்தாம் அம்பர், மத்திய அரசின் புதிய சட்ட மசோதாவை வரவேற்றுள்ளார். ஆனால், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த சட்டம் குர்ஆனின் அடிப்படையில் அமைக்கப்பட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதுபோல முத்தலாக் முறையை ரத்து செய்யக் கோரும் வழக்கின் முக்கிய மனுதாரரான பாரதிய முஸ்லிம் பெண்கள் போராட்டக் குழுவினரும் இந்த சட்ட மசோதாவை வரவேற்றுள்ளனர். ஆனால், அந்த சட்டம் குர்ஆனின் அடிப்படையில் இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பிலும், ராகுல் காந்தி, மம்தா, அகிலேஷ் மற்றும் லாலு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதனிடையே, முத்தலாக் தடை சட்ட மசோதா மீது அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் ஆய்வு நடத்தியது. பல்வேறு முக்கிய முஸ்லிம் அமைப்புகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x