Published : 23 Aug 2023 04:25 AM
Last Updated : 23 Aug 2023 04:25 AM

‘இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்’: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ (BRICS) எனப்படுகிறது. இதன் தலைமை பொறுப்பை தற்போது தென்னாப்பிரிக்கா வகிப்பதால், அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 15-வது பிரிக்ஸ் மாநாடு 24-ம் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “உலகப் பொருளாதார சூழ்நிலையில் கொத்திப்பான நிலை இருந்தாலும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. விரைவில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும், வரும் ஆண்டுகளில் உலகத்துக்கான வளர்ச்சி இயந்திரமாக இந்தியா மாறும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா, தொற்றுநோயை பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்வதற்கான வாய்ப்பாக மாற்றியதே இதற்குக் காரணம். நாங்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மூலம், இந்தியாவில் எளிதாக வணிகம் மேம்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியை கொண்டுவந்ததன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளோம். தொழில்நுட்பத்தின் உதவியுடன், நிதி உள்ளடக்கிய துறையில் இந்தியா முன்னேறியுள்ளது. கிராமப்புற பெண்களே அதிக பயனாளிகளாக உள்ளனர். ஒரே கிளிக்கில், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நேரடி பரிமாற்ற பலன் மூலம் பயனடைகின்றனர். யுபிஐ தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது. இது மொத்தம் 360 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.

இதுபோன்றவை சேவை வழங்கலில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஊழல் மற்றும் இடைத்தரகர்களின் பங்கைக் குறைக்கிறது. கோவிட் -19 தொற்றுநோயை குறைத்ததில், பிரிக்ஸ் நாடுகளின் பங்கு முக்கியமானது.

உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள் உள்ளன" இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x