Published : 21 Aug 2023 07:51 AM
Last Updated : 21 Aug 2023 07:51 AM

ஏழுமலையான் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வரும் 24-ம் தேதி ஆன்லைனில் வெளியீடு

கோப்புப்படம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வரும் நவம்பர் மாதத்தில் பக்தர்கள் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்வது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை சேவைகளுக்கான டிக்கெட்டுகளின் முன்பதிவு கடந்த 19-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

இது, இன்று (ஆக. 21) காலை 10 மணியுடன் முடிவடைகிறது. இதில் ‘டிப் சிஸ்டம்’ எனப்படும் குலுக்கல் பிரிவில் பக்தர்கள் தங்களுக்கு தேவையான ஆர்ஜித சேவையை முன்பதிவு செய்து கொண்டால், அவர்கள் டிஜிட்டல் முறைப்படி குலுக்கலில் தேர்வு செய்யப்படுவர். அதன்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவர்கள் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு தேவஸ்தானம் சார்பில் தகவல் அனுப்பி வைக்கப்படும். தகவல் கிடைத்த பக்தர்கள், இன்று முதல் 23-ம் தேதி மதியம் 12 மணிக்குள் ஆர்ஜித சேவை டிக்கெட்டுக்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோன்று குலுக்கல் முறைக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற சேவைகளுக்கு பக்தர்கள் 22-ம் தேதி ஆன்லைனில் காலை 10 மணிக்கு பங்கேற்கலாம். மேலும் நவம்பர் மாதத்தில் இலவச அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும்பக்தர்கள் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

23-ம் தேதி காலை 11 மணிக்கு வாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதே நாளில் மதியம் 3 மணிக்கு மூத்த குடிமகன்கள், மாற்றுத் திறனாளி பக்தர்களுக்கான ஆன்லைன் டோக்கன்கள் வெளியாக உள்ளது.

நவம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதத்தில் திருமலையில் பக்தர்களுக்கான தங்கும் அறைக்கான முன்பதிவு 25-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த சேவைகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவுகளை https://tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணையத்தில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x