Published : 07 Dec 2017 10:08 AM
Last Updated : 07 Dec 2017 10:08 AM

ராமர் கோயில் விவகாரத்தை தேர்தலுடன் இணைக்கிறது காங்.,: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

ராமர் கோயில் விவகாரத்தை மக்களவை தேர்தலுடன் காங்கிரஸ் இணைக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

ராம ஜென்மபூமி - பாபர் மசூதி வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல், சன்னி வக்பு வாரியம் சார்பில் வாதிட்டு வருகிறார். இந்த வழக்கில் கபில் சிபல் நேற்று முன்தினம் வாதிடும்போது, “2019 மக்களவை தேர்தல் முடியும் வரை இவ்வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் தந்துகா என்ற இடத்தில் நேற்று நடந்த பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி தரப்பினருக்காக கபில் சிபல் வாதிடுகிறார். இது அவரது உரிமை. அதில் நமக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஆனால் 2019 வரை இந்த வழக்கை அவர் தள்ளிவைக்க கோருவது சரிதானா? எதற்காக அவர் ராமர் கோயில் விவகாரத்தை தேர்தலுடன் இணைக்கிறார்? இத்தகைய சிந்தனை சரியானதா? ராமர் கோயில் விவகாரத்தை மக்களவை தேர்தலுடன் காங்கிரஸ் இணைக்கிறது. தேசத்தை பற்றி அக்கட்சிக்கு துளியும் கவலை இல்லை” என்றார்.

கபில் சிபலின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணையை 2018 பிப்ரவரி 8-க்கு தள்ளிவைத்துள்ளது. கபில் சிபலின் கோரிக்கை அவரது சொந்தக் கருத்து என காங்கிரஸ் கூறிவிட்டது. - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x