Published : 16 Aug 2023 04:53 AM
Last Updated : 16 Aug 2023 04:53 AM

உண்மையான அடையாளத்தை மறைத்து பாலியல் உறவில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை - 3 புதிய மசோதாக்களின் முக்கிய அம்சங்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்துக்கு (ஐபிசி) பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு (சிஆர்பிசி) பதிலாக பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023, இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு (ஐஇசி) பதிலாக பாரதிய சாக் ஷியா விதேயக் 2023 ஆகிய 3 புதிய மசோதாக்களை மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாக்களின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

> 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக மரண தண்டனையும் விதிக்கப்படும்.

> உண்மையான (மத) அடையாளத்தை மறைத்தோ, திருமணம், பணிவாய்ப்பு, பதவி உயர்வு தொடர்பாக போலி வாக்குறுதி அளித்தோ பெண்களிடம் பாலியல் உறவில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

> ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 20 ஆண்டு சிறை, அதிகபட்சமாக சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

> வரதட்சிணை கொடுமையால் பெண்கள் உயிரிழந்தால் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை, அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

தற்கொலைக்கு தூண்டினால்..

> கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.

> கும்பலாக சேர்ந்து கொலை செய்யும் குற்றத்துக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை, அதிகபட்சம் மரண தண்டனை விதிக்கப்படும்.

> ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அவரை தற்கொலை செய்ய தூண்டியவருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

> ஆள்கடத்தலில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

> ஒன்றுக்கும் மேற்பட்டோரை கடத்து வோருக்கு குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் சிறை, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை

> இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுப்போருக்கு (தீவிரவாதிகளின் ஆயுத போராட்டம்) மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

> அரசுக்கு எதிராக செயல்படும் நபகர்களிடம் ஆயுதங்களை வழங்குவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

> இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுப்போருக்கு ஆள்சேர்ப்பது, அடைக்கலம் அளிப்பது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

> இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலும் பிரிவினைவாதிகளுக்குஆதரவாகவும் பேசுவது, எழுதுவது, நிதியுதவிவழங்குவது உள்ளிட்ட குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

> தலைமறைவு குற்றவாளிகள் மீதான விசாரணை தொடர்ந்து நடத்தப்படும். அவர்களுக்கான தண்டனையும் அறிவிக்கப்படும்.

> மதம், சாதி ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை, அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

> குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் அந்தகுற்றவாளி சிறையில் இருந்து விடுதலை செய்யப்படமாட்டார்.

> மரண தண்டனை கைதிகள் தங்களது தண்டனையை குறைக்கக்கோரி குறிப்பிட்ட காலத்துக்குள் கருணை மனுவை அனுப்ப வேண்டும். ஒருவேளை கருணை மனு நிராகரிக்கப்பட்டால் 60 நாளுக்குள் குடியரசுத் தலை வருக்கு கருணை மனு அனுப்ப வேண்டும்.

> குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல்செய்ய நீதிமன்றத்தால் மட்டுமே உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது.

பூஜ்ஜிய எப்ஐஆர்

> இந்திய குடிமகன் ஒருவர் எந்தவொரு போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்க முடியும். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு 15 நாட்களுக்குள் அந்த புகாரை போலீஸார் அனுப்ப வேண்டும். எப்ஐஆர் முதல் தீர்ப்பு வரை அனைத்தும் டிஜிட்டலில் பதிவு செய்யப்பட வேண்டும்.

> வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம். கைது செய்யப்பட்டதற்கான ஆவணத்தை சம்பந்தப்பட்ட உறவினரிடம் போலீஸார் வழங்க வேண்டும். 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் தடயவியல் ஆய்வு கட்டாயம்.

> வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் கையெழுத்து, குரல் பதிவு, விரல் ரேகைபதிவை போலீஸார் பெறலாம். வழக்கில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆதாரங்களாகப் பயன்படுத்தலாம்.

> செல்போன் பறிப்பு உள்ளிட்ட சிறிய குற்றங்களும் கிரிமினல் வழக்காக கருதப்படும். ரூ.5,000-க்கு குறைவான திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சமூக சேவை சார்ந்த தண்டனைகளை வழங்கலாம்.

> ஒவ்வொரு போலீஸ் நிலையம், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பழைய வழக்குகளில் கைது செய்யப்பட்டோரின் முழுவிவரங்கள் அடங்கிய டிஜிட்டல் தொகுப்பை உருவாக்க வேண்டும்.

> ஒரு வழக்கில் போலீஸார் 90 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் விரும்பினால் கூடுதலாக 90 நாட்கள் அவகாசம் வழங்கலாம். இதன்படி 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

> குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 60 நாட்களுக்குள் நீதிமன்றம் குற்றச்சாட்டை பதிவுசெய்ய வேண்டும். விசாரணை நிறைவு பெற்ற 30 நாளில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். 3 ஆண்டில் நீதி வழங்கப்பட வேண்டும்.

> அனைத்து நீதிமன்றங்களும் வரும் 2027-க்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும். இதன்மூலம் வழக்குகளை சில நொடிகளில் கண்டுபிடிக்க முடியும்.

புதிய ‘லவ் ஜிகாத்' தடை சட்டம்: உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கூறியதாவது: உண்மையான அடையாளங் களை மறைத்து பெண்களை திருமணம் செய்து பாலியல் உறவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தராகண்டின் ஹரித்வாரை சேர்ந்த சோனியாவை, ராகுல்என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகே அவரது உண்மையான பெயர் அசார் அகமதுஎன்பது சோனியாவுக்கு தெரியவருகிறது.

இதுதொடர்பாக ஹரித்வார் போலீஸ் நிலையத்தில் சோனியா புகார் அளித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் இதுபோன்ற லவ் ஜிகாத் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. புதிய மசோதாவில் இடம்பெற்றிருக்கும் சட்ட விதிகளின்படி இதுபோன்ற லவ் ஜிகாத் வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும். இவ்வாறு மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x