Published : 12 Aug 2023 04:07 AM
Last Updated : 12 Aug 2023 04:07 AM

குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் 3 புதிய மசோதாக்கள் அறிமுகம் - மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார்

புதுடெல்லி: ஐபிசி, சிஆர்பிசி, ஐஇசி ஆகிய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் 3 புதிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

இந்திய குற்றவியல் சட்டத்துக்கு (ஐபிசி) பதிலாக பாரதிய நியாய சம்ஹிதா 2023, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு (சிஆர்பிசி) பதிலாக பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023, இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு (ஐஇசி) பதிலாக பாரதிய சாக்‌ஷிய விதேயக் 2023 ஆகிய 3 புதிய மசோதாக்கள் வரையறுக்கப்பட்டு உள்ளன. மக்களவையில் இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த 1860-ம் ஆண்டில் இந்திய குற்றவியல் சட்டம், 1898-ம் ஆண்டில் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், 1872-ம் ஆண்டில் இந்திய சாட்சிகள் சட்டம் வரையறுக்கப்பட்டன. இவை ஆங்கிலேயர் கால சட்டங்கள். இவை ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டன. இவற்றால் நீதி நிலைநாட்டப்படவில்லை. தண்டனைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.

எனவே இந்த 3 சட்டங்களுக்கு பதிலாக, இந்தியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் 3 புதிய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.தண்டனை வழங்குவதை குறிக்கோளாககொண்டு இவை வரையறுக்கப்படவில்லை. நீதியை நிலைநாட்டும் வகையிலேயே இந்த புதிய மசோதாக்களின் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 18 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள், உச்ச நீதிமன்றம், 22 உயர் நீதிமன்றங்கள், 5 சட்ட அமைப்புகள், 5 பல்கலைக்கழகங்கள், 142 எம்.பி.க்கள், 270 எம்எல்ஏக்கள், பொதுமக்கள் ஆகியோரின் பரிந்துரைகள், ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தபுதிய மசோதாக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

கும்பல் கொலைக்கு மரண தண்டனை: இதன்மூலம், தற்போது நடைமுறையில் இருக்கும் தேசத் துரோக சட்டம் திரும்ப பெறப்படும். தேசத் துரோக சட்டத்தின் மூலம் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியும். அதை மாற்றி 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதாக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கும்பலாக சேர்ந்து கொலை செய்யும் குற்றத்துக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக மரண தண்டனையும் விதிக்கப்படும். சிறாரை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறாரின் அடையாளத்தை வெளிப்படுத்துவோருக்கு மிக கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

90 நாளில் குற்றப்பத்திரிகை: புதிய மசோதாக்களின்படி, ஒரு வழக்கில் போலீஸார் 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் விரும்பினால் கூடுதலாக 90 நாட்கள் அவகாசம் வழங்கலாம். இதன்படி, 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

தற்போதைய சட்ட விதிகளின்படி, போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்த அரசின் அனுமதியை பெற வேண்டும். புதியமசோதாக்களின்படி 120 நாட்களுக்குள் அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அனுமதி வழங்கியதாகவே கருதப்படும்.

பல்வேறு மாநிலங்களில் செயல்படும் ரவுடி கும்பல்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். செல்போன் பறிப்பு உள்ளிட்ட சிறிய குற்றங்களும் கிரிமினல் வழக்காக கருதப்படும்.

அப்பாவிகள் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்வதாக புகார்கள் எழுகின்றன. இதை தடுக்க, குற்றம் சாட்டப்பட்டவரின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்படும் பொருட்களை வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

இந்த 3 புதிய மசோதாக்களையும் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்புமாறு சபாநாயகரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

2020-ல் கமிட்டி நியமனம்: புதிய மசோதாக்கள் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஐபிசி, சிஆர்பிசி, ஐஇசி சட்டங்களை மறுசீரமைக்க கடந்த 2020 மார்ச்சில் சட்ட நிபுணர்கள் அடங்கிய சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. டெல்லியில்உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் ரன்வீர் சிங் இதன் தலைவராகவும், சட்ட பேராசிரியர்கள் பாஜ்பாய், பல்ராஜ் சவுகான், மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜேத்மலானிஉள்ளிட்டோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

கமிட்டி நடத்திய பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு ஐபிசி சட்டத்தில் 22 பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. 175 பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சிஆர்பிசி சட்டத்தில் 107 பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 9 பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐஇசி சட்டத்தில் 23 பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய மசோதாக்களின்படி, ஒரு வழக்கில் புகார் முதல் தீர்ப்பு வரை அனைத்தும் டிஜிட்டலில் பதிவு செய்யப்பட வேண்டும். 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில், சம்பவ இடத்தில் தடயவியல் ஆய்வு கட்டாயம். வழக்கில் விசாரணை முடிந்த பிறகு, 30 நாளில் தீர்ப்புவழங்க வேண்டும். வெளியான 7 நாளில்ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x