Published : 10 Aug 2023 05:33 AM
Last Updated : 10 Aug 2023 05:33 AM

என்னைக் கொல்ல சதி நடக்கிறது - சந்திரபாபு நாயுடு பரபரப்பு புகார்

விஜயநகரம்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று விஜயநகரத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: என்னை கொல்ல பல முறை முயற்சி நடந்துள்ளது. ஆனால், என் மீதே போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது. எனது பாதுகாவலர்கள், மீடியா மற்றும் பொதுமக்களே இதற்கு சாட்சி. என் மீதான கொலை முயற்சிகளை நான் அறிவேன். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்துவது அவசியம்.

நான் மக்களிடையே செல்ல கூடாது என்பதற்காகவே என் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். என் மீது கல்வீசி தாக்குதல் நடந்தாலும், அங்கு வெறும் பார்வையாளர்களாகவே போலீஸார் உள்ளனர். ஒரு எதிர் கட்சி தலைவர் வரும்போது, அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் கூட்டமாக வரவேண்டிய அவசியம் என்ன?

ஒரு மாநிலத்தின் முதல்வர் சைக்கோவாக இருந்தால் இப்படித்தான் நடக்கும். இவ்வாறு முதல்வர் ஜெகன் மீது பரபரப்பு குற்றச்சாடுகளை முன்வைத்தார்.

ஆந்திராவில் அணைகளில் நீர் நிலை திட்டங்களை ஜெகன் அரசு சரிவர கவனிக்கவில்லை. என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நீர்நிலை பகுதிகளில் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

போலீஸார் தடியடி: அன்னமைய்யா மாவட்டத்திற்கு அவர் வந்த போது, அவரை பை-பாஸ் சாலையில் வரவிடாமல் ஜெகன் கட்சியினர் முன்கூட்டியே அங்கு வந்து கருப்பு கொடி காட்டினர். அப்போது இதனை தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டித்ததால் கலவரம் நடந்தது. போலீஸார் இரு தரப்பினரையும் கலைக்க கண்ணீர் புகை குண்டு களை வீசினர். தடியடி நடத்தினர்.

இதில் போலீஸார் உட்பட ஆளும் கட்சி, தெலுங்கு தேசம்கட்சியினர் என 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால், இதற்கு காரணம் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கு தேசம் கட்சியினரும் தான் என போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x