Last Updated : 01 Jul, 2014 06:57 PM

 

Published : 01 Jul 2014 06:57 PM
Last Updated : 01 Jul 2014 06:57 PM

நீதித் துறையின் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்: மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கண்டனம்

‘நீதித்துறையின் சுதந்திரத்தை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டேன். புதிய நீதிபதிகள் பரிந்துரையில் ஒரு பெயரை மத்திய அரசு பிரித்தது தவறு’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற வளாகத்தில் பிரிவுபசார விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமையேற்ற தலைமை நீதிபதி ஆர்.லோதா பேசியதாவது:

புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கோபால் சுப்ரமணியத்தின் பெயரை மட்டும் மத்திய அரசு தன்னிச்சையாகப் பிரித்து திருப்பி அனுப்பியது தவறு. அதிகார அமைப்புகள் ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம். அதே சமயம் நீதித்துறையின் சுதந்திரத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

கோபால் சுப்ரமணியத்தின் பெயர் திருப்பி அனுப்பப்பட்ட தகவல் அறிந்ததும் ரஷ்யாவில் இருந்து ஜூன் 24-ம் தேதி அவரிடம் தொடர்பு கொண்டு பேசினேன். ஜூன் 28-ம் தேதி இந்தியா திரும்பியதும் இப்பிரச்சினையைக் கவனிக்கிறேன் என்று தெரிவித்தேன். ஆனால் கோபால் சுப்ரமணியம் நீதிபதி பதவிக்கான பரிசீலனையில் இருந்து வாபஸ் பெறுவதாக வெளியான தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரை என் வீட்டுக்கு அழைத்து நீண்ட நேரம் பேசினேன். அவரது கடிதத்தை வாபஸ் பெறும்படி கேட்டுக் கொண்டேன். அப்படி செய்தால் அவரது பெயரை மீண்டும் பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்தேன்.

ஆனால் ஜூன் 29-ம் தேதி ஆறு வரிகளில் இன்னொரு கடிதத்தை கோபால் சுப்ரமணியம் அனுப்பி இருந்தார். அதில் நீதிபதி பரிசீலனையில் இருந்து வாபஸ் பெறுவதை மீண்டும் உறுதி செய்திருந்தார். அதனால் அவரது பெயரை மீண்டும் பரிந்துரைக்க முடியவில்லை. இவ்வாறு தலைமை நீதிபதி லோதா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x