Published : 09 Aug 2023 03:22 PM
Last Updated : 09 Aug 2023 03:22 PM

“நீங்கள் இந்தியா கிடையாது” - மக்களவையில் ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி பதிலடி

மக்களவையில் ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானி

புதுடெல்லி: “பாரத மாதா இறந்துவிட்டார் என்கிறீர்களா?” என்று மக்களவையில் ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பினார். மேலும், ராகுல் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், “நீங்கள் இந்தியா கிடையாது” என்றார்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டுவிட்டார்” என கூறி குற்றம்சாட்டினார். அவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "முதல்முறையாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பாரத மாதாவின் மரணம் குறித்துப் பேசுகிறார். அவரது கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் கை தட்டுகிறார்கள்.

நீங்கள் இந்தியா கிடையாது. இந்தியா ஊழல் செய்யாததால் நீங்கள் இந்தியா இல்லை. இந்தியா தகுதியை நம்புகிறது; வாரிசு அரசியலை அல்ல. நாடு சுதந்திரம் அடையும் முன் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை நாடு முழங்கியது. இதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று நாடு, ஊழலே இந்தியாவைவிட்டு வெளியேறு என்கிறது; வாரிசு அரசியலே நாட்டை விட்டு வெளியேறு என்கிறது. தகுதியைத்தான் இந்தியா கோருகிறது.

நாட்டில் அவசரநிலையைப் பிறப்பித்த கட்சி காங்கிரஸ். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட கட்சி காங்கிரஸ். ஜம்மு காஷ்மீரில் கிரிஜா திக்கோ என்ற பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தெரிவித்த திரைப்படத்தை பிரச்சாரம் என்று கூறிய கட்சி காங்கிரஸ். அதே கட்சிதான், தற்போது மணிப்பூர் குறித்துப் பேசுகிறது.

அவையில் பேசிய ராகுல் காந்தி தான் மேற்கொண்ட யாத்திரை குறித்தும், ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 சட்டப்பிரிவு அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்ததாகவும் கூறினார். (அவையில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியதைச் சுட்டிக்காட்டி) அவையில் இருந்து வெளியேறிய நபரால் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரவும் முடியாது; ஒன்று மதம் மாறுங்கள்; இல்லாவிட்டால் கொல்லப்பட தயாராகுங்கள்; இல்லாவிட்டால் காஷ்மீரைவிட்டு வெளியேறுங்கள் என்று பண்டிட் மக்களை அச்சுறுத்துபவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள். மணிப்பூர் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. நாங்கள் அவையில் இருக்கிறோம். ஆனால், அவர்கள் அவையில் இல்லை" என பேசினார்.

முன்னதாக, மணிப்பூரை இந்தியாவின் பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை என்றும், மணிப்பூரில் இந்தியாவை பாஜக கொன்றுவிட்டது என்றும் மக்களவையில் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி காட்டமாக பேசினார். அதனை வாசிக்க > “முதலில் மணிப்பூர், பிறகு ஹரியாணா... நாட்டையே எரிக்க முயல்கிறீர்கள்” - மக்களவையில் ராகுல் காந்தி காட்டம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x