Published : 07 Aug 2023 02:01 PM
Last Updated : 07 Aug 2023 02:01 PM

4 மாதங்களுக்குப் பின் நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தி - ‘ஜிந்தாபாத்’ முழங்கி வரவேற்ற ‘இண்டியா’ எம்.பி.க்கள் 

புதுடெல்லி: தகுதி இழப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி 4 மாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்றம் வந்தார். அவரை ‘ராகுல் காந்தி ஜிந்தாபாத்’ என முழங்கி எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் வரவேற்றனர்.

நாடாளுமன்றம் வந்த ராகுல்: மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, ராகுல் காந்தியின் தகுதி இழப்பை மக்களவைச் செயலகம் ரத்து செய்தது. இதனைத் தொடந்து நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கும் விதமாக பகல் 12 மணிக்கு ராகுல் காந்தி நாடாளுமன்றம் வந்தார். அவரை வரவேற்கும் விதமாக ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் ‘ராகுல் காந்தி ஜிந்தாபாத்’ என முழக்கம் எழுப்பி வரவேற்றனர். ராகுல் காந்தியின் நாடாளுமன்ற மறுவருகையைக் கொண்டாடும் விதமாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செய்தார்.

இரு அவைகளும் ஒத்திவைப்பு: ராகுல் காந்தியின் தகுதி இழப்பு ரத்து, டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் போன்ற பரபரப்புகளுக்கு மத்தியில், திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. மக்களவை காலையில் கூடியதும், மணிப்பூர் விவாகரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை தொடங்கிய சில நிமிடங்களில் பகல் 12 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், 12 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது கூட்டத் தொடரில் தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட வயநாடு எம்.பி ராகுல் காந்தி கூட்டத்தொடரில் பங்கேற்றார். இந்த நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளிகள் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, மாநிலங்களவையில் டெல்லி சேவைகள் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், அவை கூடியதும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பின. காங்கிரஸ் எம்.பி கேசி வேணுகோபால் ‘மணிப்பூர் பற்றி எரிகிறது’ என்றார். அதற்கு பதில் அளித்த சபைத் தலைவர் பியூஸ் கோயல், "அரசு விவாதத்துக்கு தயாராக இருக்கிறது. எதிர்க்கட்சிகள்தான் விவாதத்தில் இருந்து ஓடுகின்றன. நாங்கள் அதைக் கண்டிக்கிறோம். அதேபோல் ராஜஸ்தான் விவாகரம் குறித்தும் தாங்கள் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும்" என்றார். இதனைத் தொடர்ந்து அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

ட்விட்டர் எக்ஸ் ‘பயோ’வை மாற்றிய ராகுல்: இதற்கிடையில், தகுதி இழப்புக்கு ஆளானபோது தனது ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தின் ‘பயோ’வில் தகுதி இழப்புக்குள்ளான எம்பி எனக் குறிப்பிட்டிருந்த ராகுல் காந்தி, தகுதி இழப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது ‘பயோ’வை நாடாளுமன்ற உறுப்பினர் எனச் சுட்டும் வகையில் மெம்பர் ஆஃப் பார்லிமென்ட் என்று மாற்றியுள்ளார்.

ரஜனி பாட்டீல் இடைநீக்கம் ரத்து: காங்கிரஸின் மூத்த மாநிலங்களவை எம்.பி. ரஜனி அசோக்ராவ் பாட்டீலை மீண்டும் அவையில் சேர்க்க வேண்டும் என்று சிறப்பு உரிமைக் குழு முன்மொழிந்ததைத் தொடர்ந்து, அவரது இடைநீக்கம் இன்று (ஆக.7) ரத்து செய்யப்பட்டது. முன்னதாக, மாநிலங்களவையில் நடந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்து அதை வெளியில் பகிர்ந்ததற்காக பட்ஜெட் கூட்டத்தொடரிடன் எஞ்சிய நாட்களுக்கு ரஜனி பாட்டீல் பிப்.10-ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x