Published : 07 Aug 2023 07:04 AM
Last Updated : 07 Aug 2023 07:04 AM

அடுத்த ரத யாத்திரையின்போது கோயில் கஜானாவை திறக்க வேண்டும் - ஒடிசா அரசுக்கு புரி ஜெகன்னாதர் கோயில் குழு கோரிக்கை

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயில் அமைந்துள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரையில் உள்நாடு மட்டுமன்றி உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கோயிலை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ஏஎஸ்ஐ) பராமரித்து வருகிறது.

இந்நிலையில் கோயிலின் நிர்வாகக் குழுக் கூட்டம் 2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயிலின் கஜானா, `ரத்னா பந்தர்` என்று அழைக்கப்படுகிறது. இந்த கஜானாவில் விலைமதிப்பற்ற நகைகளும், பொருட்களும் உள்ளன.

இதற்கு முன்பு 1979-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி இந்தகஜானா திறக்கப்பட்டது. அப்போது கஜானாவில் இருந்த சிலநகைகள், பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டன. அதன் பிறகு கடந்த 1985-ல் கஜானா திறக்கப்பட்டாலும் அங்கிருந்த பொருட்களை யாரும் கணக்கெடுப்பு செய்யவில்லை.

இந்நிலையில் அடுத்த ரதயாத்திரையின் போது கோயில் கஜானா திறக்கப்பட வேண்டும் என்று நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்ரீ ஜெகன்னாதர் கோயில் நிர்வாகக் குழு (எஸ்ஜேடிஏ) சார்பில் தொல்பொருள் ஆய்வுத் துறைக்கும், மாநில அரசுக்கும் கடிதம் அனுப்பப்பட உள்ளது.

இதுகுறித்து புரி மாவட்ட ஆட்சியர் சமர்த் வர்மா கூறியதாவது: கோயிலின் ஆகம பூஜைகள் கெடாத வண்ணமும், கோயிலுக்கு வரும் பக்தர்களை தொந்தரவு செய்யாத வண்ணமும் கஜானாவில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தவேண்டும் என்று ஒடிசா மாநில அரசுக்கு கோயில் நிர்வாகக் குழு கடிதம் அனுப்ப உள்ளது. ரத்னா பந்தர் கஜானாவை திறக்கவும், அதை பழுது பார்க்கவும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிதலைமையில் உயர்நிலைக் குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும்.

கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். ரத்னா பந்தர் கஜானாவில் லேசர் ஸ்கேனிங் போன்ற நவீன தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்வதற்கும், கஜானாவை வெளிப்புறமாக மதிப்பிடுவதற்கும் இந்த தொழில்நுட்பக் குழு பரிந்துரைகளை அளிக்கும். இந்தக் குழு தனது அறிக்கையை அடுத்த நிர்வாகக் குழு கூட்டத்துக்கு முன்னதாக சமர்ப்பிக்கும். இவ்வாறு புரி மாவட்ட ஆட்சியர் சமர்த் வர்மா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x