Last Updated : 12 Jul, 2014 12:00 AM

 

Published : 12 Jul 2014 12:00 AM
Last Updated : 12 Jul 2014 12:00 AM

நித்யானந்தா போஸ்டர்களை கிழித்து எறிந்த கன்னட அமைப்புகள்

நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள குரு பூர்ணிமா பூஜையையொட்டி பெங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு போஸ்டர்கள், பிளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை வெள்ளிக்கிழமை கன்னட சலுவளி கட்சியினர் கிழித்து எறிந்தனர்.

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவின் 'தியான பீடம்' ஆசிரமம் பெங்களூரை அடுத்த பிடதியில் உள்ளது. 2010-ம் ஆண்டு நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை யறையில் உள்ளது போன்ற வீடியோ ஊடகங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பிடதியில் உள்ள அவரது ஆசிரமத்தை பல்வேறு கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர்.

நித்யானந்தா மீது பல்வேறு புகார்கள் குவிந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்திருக்கும் அவர், பிடதி ஆசிரமத்தில் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக் கின்றன. மேலும் நித்யானந்தா உடனடியாக கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும் என போராடி வருகின்றன.

குரு பூர்ணிமா பூஜை

இந்நிலையில் பிடதி ஆசிரமத்தில் சனிக்கிழமை குரு பூர்ணிமா பூஜை நடைபெற இருக்கிறது.இதனையொட்டி அவரின் சீடர்கள் வெள்ளிக்கிழமை பெங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு பக்தர்களை வரவேற்கும் போஸ்டர்களையும் பிளெக்ஸ் பேனர்களையும் வைத்துள்ளனர். பிடதி ஆசிரமத்திற்கு செல்லும் வழியில் நித்யானந்தாவின் பிரம்மாண்ட கட் அவுட்டையும் வைத்துள்ளனர். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கன்னட சலுவளி கட்சி தொண்டர்கள் வெள்ளிக்கிழமை அந்த போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அக்கட்சியின் மாநில தலைவர் மது கவுடாவும் தொண்டர்களுடன் சேர்ந்து சாலையின் இரு பக்கங்களிலும் வைக்கப்பட்டிருந்த நித்யானந்தாவின் பிளெக்ஸ் பேனர்களை கிழித்தார். நித்யானந்தாவிற்கு எதிராக ஆபாச கோஷங்களை எழுப்பிய கன்னட அமைப்பினர், பேனர்களை தீயிட்டும் கொளுத்தினர்.

முற்றுகை போராட்டம்

இதனிடையே மது கவுடா செய்தியாளர்களிடம் பேசுகை யில், “ஆபாச வீடியோவில் சிக்கிய நித்யானந்தா இன்னமும் சாமியார் எனக்கூறி மக்களை ஏமாற்றுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. ஜாமீனில் வெளிவந்திருக்கும் அவர் பிடதியில் எவ்வித ஆன்மீக நிகழ்ச்சியிலும் ஈடுபட கூடாது. பொதுமக்களை திரட்டக் கூடாது என ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சட்டத்தை மதிக்காமல் நித்யானந்தா தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடக மக்களை ஏமாற்றும் நித்யானந்தாவை கூடிய விரைவில் இந்த மண்ணை விட்டு துரத்துவோம். எங்களது எதிர்ப்பையும் மீறி போலி சாமியார் நித்யானந்தா சனிக்கிழமை பூஜையில் ஈடுபட்டால், ஆசிரமத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்''என்றார்.

143 நாடுகளுக்கு நேரலை

இந்நிலையில் பிடதி ஆசிரமத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, ‘‘பிடதி ஆசிரமத்தில் இதுவரை தொடர்ந்து 12 ஆண்டுகள் குரு பூர்ணிமா விழா நடத்தி இருக்கிறோம். எங்களுடைய சுவாமிஜி ஒரு முறை ஒரு நிகழ்ச்சியை அறிவித்து விட்டார் என்றால், யார் தடுத்தாலும் அதை நிறுத்த முடியாது.

காலை 9 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சுவாமிஜி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இது நேரலையாக 143 நாடுகளில் உள்ள பக்தர்களுக்கு தடங்கலின்றி ஒளிபரப்பாகும்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x