Last Updated : 16 Nov, 2017 09:48 AM

 

Published : 16 Nov 2017 09:48 AM
Last Updated : 16 Nov 2017 09:48 AM

இன்று அயோத்தி செல்கிறார் வாழும் கலை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், அயோத்தி பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முயன்று வருகிறார். ரவிசங்கரை இந்து மற்றும் முஸ்லிம் தரப்பின் ஆதரவாளர்கள் சிலரும், உ.பி. மத்திய ஷியா வக்பு வாரியத் தலைவர் வசீம் ரிஜ்வியும் பெங்களூருவில் சந்தித்து பேசியுள்ளனர்.

இதையடுத்து நேற்று லக்னோ சென்றடைந்த ஸ்ரீஸ்ரீ இன்று அயோத்தி செல்கிறார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மற்றும் பாபர் மசூதி நடவடிக்கை குழுவினர் மீண்டும் மறுத்து விட்டதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் தரப்பினர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் தரப்பு எதிர்நோக்கியுள்ளது. ஸ்ரீஸ்ரீயிடம் உறுதியான எந்த ‘பார்முலா’வும் இல்லை. முதலில் அவர் விஷ்வ இந்து பரிஷத்திடம் பேசிவிட்டு எங்களிடம் வரட்டும் எனக் கூறி நாங்களும் பாபர் மசூதி நடவடிக்கை குழுவினரும் மறுத்து விட்டோம்” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், அயோத்தியில் ஹனுமன்கிரி மடத்தில் இந்து தரப்பில் ஒருவரான நிர்மோஹி அகாடாவினர் மற்றும் சாதுக்களை ரவிசங்கர் சந்திக்கிறார். பிறகு ஸ்ரீராமஜென்ம பூமி கோயில் அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸை சந்திக்கிறார். பாபர் மசூதியின் முத்தவல்லியும் வழக்கின் முக்கிய மனுதாரருமான ஹாசீம் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரியை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாசீம் அன்சரி இறந்து விட்டதால் பாபர் மசூதி வழக்கை அவரது மகன் இக்பால் அன்சாரி எடுத்து நடத்தி வருகிறார்.

வரும் நவம்பர் 24 முதல் 26-ம் தேதி வரை விஎச்பி சாதுக்களின் தர்மசபை கூட்டம் கர்நாடகாவின் உடுப்பியில் நடைபெற உள்ளது. இதில், ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் பேச்சுவார்த்தை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. முன்னதாக நேற்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x