Published : 04 Aug 2023 05:00 AM
Last Updated : 04 Aug 2023 05:00 AM

வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

கோப்புப்படம்

லக்னோ: உத்தர பிரதேசம், வாரணாசியில் கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி இன்றுமுதல் ஆய்வு தொடங்குகிறது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில்உள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த கோயிலின் ஒரு பகுதியை இடித்து மசூதி கட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கியான்வாபி மசூதி சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி கடந்த 2021 ஆக.18-ம் தேதி 5 இந்துபெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் களஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு கடந்த ஆண்டுமே மாதம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மசூதி ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு, கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடக் கோரி இந்து பெண்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷா, மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூர்வமான ஆய்வு நடத்த சமீபத்தில் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மனுவை விசாரித்து, உத்தர பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உத்தரவிட்டது.

இதன்படி உயர் நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரித்திங்கர் திவாகர் விசாரணை நடத்தினார். கடந்த மாத இறுதியில் இந்து பெண்கள் மற்றும்மசூதி நிர்வாகம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்துக்கள் தரப்பில் கூறும்போது, “இந்து கோயில் மீது மசூதி கட்டப்பட்டுள்ளது. இதை மசூதி என்று கூற முடியாது. அதன் வெளிப்புற சுவரில் இந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளன. உள்ளே சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே, உண்மையை உறுதி செய்ய இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தப்பட்டது.

“தொல்லியல் துறை ஆய்வு நடத்தினால் மசூதி முழுமையாக சேதமடையும். எனவே, ஆய்வு நடத்த கூடாது’’ என்று மசூதி நிர்வாகம் தரப்பில் கோரப்பட்டது.

கடந்த 27-ம் தேதி வாதங்கள் முடிந்த நிலையில் தலைமை நீதிபதி பிரித்திங்கர் திவாகர் நேற்று தீர்ப்பு வழங்கினார். மசூதி நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி திவாகர், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தார். இதன்படி, கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்றுமுதல் ஆய்வு: வாரணாசி மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் கூறும்போது, “கியான்வாபி மசூதியில் ஆய்வு நடத்த மாவட்டநிர்வாகத்தின் உதவியை இந்திய தொல்லியல் துறை கோரியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்படும். தொல்லியல் துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். ஆக.4 முதல் தொல்லியல் துறையின் ஆய்வு தொடங்கும்’’ என்றார்.

இதற்கிடையே, இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக மசூதி நிர்வாகம் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x