Published : 23 Nov 2017 06:10 PM
Last Updated : 23 Nov 2017 06:10 PM

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தாமதம்: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் புகார்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட உத்தரவிடக் கோரி, குடியரசுத் தலைவருக்கு, காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் 3-வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் 3-வது வாரம் வரை நீடிக்கும். தற்போது குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 'நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சீர்குலைக்க மத்திய பாஜக அரசு சதி செய்கிறது'  எனக் கூறினார்.

இதற்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் அனந்தகுமார் ''சட்டப்பேரவை தேர்தல்கள் நடக்கும் போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் மாற்றியமைக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் இதுபோன்று நடந்துள்ளது''எனக் கூறினார்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட உத்தரவிடக் கோரி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

''நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை தொடங்காமல் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. இதற்குரிய காரணம் சொல்லப்படவில்லை. ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் பணி மகத்தானது. உரிய கால இடைவெளியில் நாடாளுமன்றம் கூடாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எனவே குடியரசுத்தலைவர் உடனடியாக தலையிட்டு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட உத்தரவிட வேண்டும்'' என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x