Published : 15 Jul 2014 06:09 PM
Last Updated : 15 Jul 2014 06:09 PM

இந்தி பயன்படுத்துவதின் வழிமுறை மாநில அரசுகளுக்கு பொருந்தாது: அமைச்சர் விளக்கம்

அரசு அலுவலகங்களில் இந்தி பயன்படுத்துவதின் வழிமுறைகள் மாநில அரசுகளுக்கு பொருந்தாது என்றும், இந்தி பேசாத மாநில மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, மக்களவையில் சி.என்.ஜெயதேவன் எழுப்பிய கேள்விக்கு அவர் இன்று எழுத்து மூலம் அளித்த பதில்:

"அலுவலக மொழிக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து அலுவலக மொழிப்பிரிவு அவ்வப்போது சுற்றறிக்கைகள் வெளியிடுவது வழக்கமாகும். இவை அலுவலக மொழிகள் சட்டம் 1963 மற்றும் அலுவலக மொழிகள் விதிகள் 1976-ன் கீழ் வெளியிடப்படுகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு 2013 செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அரசு சமூக ஊடகங்களில் அலுவலக மொழியான இந்தியையோ அல்லது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையோ பயன்படுத்துமாறு குறிப்பிடப்பட்டது.

ஏ பிரிவு மாநிலங்களில் அமைந்துள்ள மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் அதன் கீழ் உள்ள அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

உத்திரப் பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், பிஹார், ஜார்கண்ட், ராஜஸ்தான், ஹரியாணா, டெல்லி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை இந்த ஏ பிரிவு மாநிலங்களில் அடங்கும்.

இது தொடர்பான சுற்றறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் இந்த ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி வெளியிட்டது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கை ஏ பிரிவு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்தும். மாநில அரசுகளுக்கு இது பொருந்தாது.

சுற்றறிக்கை வழக்கமான அலுவலக வேலைகளின் ஒரு பகுதியாகத்தான் வெளியிடப்பட்டது. அதனால், இந்தி பேசாத மற்ற மாநில மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை" என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x