Last Updated : 01 Nov, 2017 09:48 AM

 

Published : 01 Nov 2017 09:48 AM
Last Updated : 01 Nov 2017 09:48 AM

காங்கிரஸ் ஆட்சியின்போது விமானப் போக்குவரத்து துறையில் ஊழல் ரூ.1000 கோடி கமிஷன் பெற்றதாக தரகர் தீபக் தல்வார் மீது புகார்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது விமான போக்குவரத்துத் துறையில் ரூ.1,000 கோடி கமிஷன் பெற்றதாக பெரு நிறுவனங்களின் தரகர் தீபக் தல்வார் மீது புகார் எழுந்துள்ளது

டெல்லியில் ‘டிடிஏ கன்சல்டிங் இண்டியா’ என்ற சர்வதேச நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக இருப்பவர் தீபக் தல்வார். பன்னாட்டு தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் ஆலோசகராக இருக்கும் தல்வார், அவர்களுக்கு சாதகமாக முந்தைய ஆட்சியாளர்களிடம் பேரம் பேசி ஊழல் நடக்கக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் தல்வார், தனியார் விமான சேவை நிறுவனங்களுக்காக முந்தைய ஆட்சியாளர்களிடம் பேசி வழித்தட அனுமதி மற்றும் பிற சலுகைகள் பெற்றுத் தந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதற்காக அவர் 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் கமிஷன் தொகையாக மட்டும் ரூ.1000 கோடி பெற்றதாக கூறப்படுகிறது. இந்தப் புகாரை மத்திய வருமான வரித் துறை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கமிஷன் தொகையே ரூ.1000 கோடி எனில் ஊழல் தொகை அதைவிடப் பலமடங்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் முந்தைய ஐ.மு.கூட்டணி ஆட்சியில் விமானப் போக்குவரத் துறையிலும் பெரிய ஊழல் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய வருமான வரித் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, “2ஜி வழக்கு உட்பட இரண்டு முறை தீபக் தல்வார் பெயர் வெளியாகி இருந்தது. அதில் அவர் தப்பி விட்டாலும் அதன் தொடர்சியாக தீபக் மீது 2014-க்கு பிறகு வேறுபல துறைகளில் விசாரணை தொடர்ந்தன. இதில் அவர் முந்தைய ஆட்சியாளர்கள் ஊழல் புரிய தீபக் காரணமாக இருந்ததாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டு தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இந்தியாவுடன் புதிய வழித்தட அனுமதி தருதவற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. இதன் முழுவிவரம் அடுத்ததடுத்த விசாரணையில் வெளியாகிவிடும்” என்று தெரிவித்தனர்.

கடந்த ஆட்சியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது பெரும் ஊழல் புகார் கிளம்பியது. இதன் பின்னணியில் பெருநிறுவன தரகரான நீரா ராடியாவின் பெயர் முக்கியமாகப் பேசப்பட்டது. அப்போது அவருடன் சேர்த்து மற்றொரு தரகர் என தீபக் தல்வார் பெயரும் முதல்முறையாக வெளியானது. 2ஜி வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரிக்கத் தொடங்கியபோது மீண்டும் தல்வாரின் பெயர் பரபரப்புக்குள்ளானது.

அப்போதைய சிபிஐ இயக்குநரான ரஞ்சித் சின்ஹாவை அவரது வீட்டில் 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் 15 மாதங்களில் 63 முறை சந்திக்கச் சென்றதாக தெரியவந்தது. இத்துடன் அப்போது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் பட்டேல் மற்றும் அத்துறையின் செயலாளர் மாதவன் நம்பியார் ஆகியோருக்கும் தல்வார் நெருக்கமாக இருந்ததாக தெரியவந்தது. எனினும் தீபக் தல்வார் இரண்டாவது முறையாக எந்த வழக்கிலும் சிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அமைந்த புதிய ஆட்சியில் சந்தேகத்துக்குரியவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. இதில் ஒன்றாக கடந்த ஆண்டு ஜூனில் தீபக் தல்வாரின் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் இவர் விமான சேவை அனுமதி பெற்றுத்தந்து ரூ.1000 கோடி பெற்றது உட்பட பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த விஷயம் மீது தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x