Published : 01 Aug 2023 07:09 PM
Last Updated : 01 Aug 2023 07:09 PM

மணிப்பூரில் அரசியலமைப்பு இயந்திரம் முற்றாக சீர்குலைந்துவிட்டது: உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: மணிப்பூரில் அரசியலமைப்பு இயந்திரம் முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் காட்டமாக குற்றம்சாட்டியுள்ளது.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நிர்வாண அணிவகுப்பு செய்யப்பட்ட இரு பெண்களின் மனுக்கள் உள்ளிட்ட மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பார்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனுக்கள் மீதான இன்றைய விசாரணையின்போது, மணிப்பூர் காவல் துறை மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

"குற்றங்கள் நிகழ்ந்து குறிப்பிடத்தக்க காலம் முடிவடைந்துவிட்ட போதிலும், காவல் துறை விசாரணை மிகவும் மந்தமாகவே இருக்கிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், குறைவான எண்ணிக்கையிலேயே கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநில காவல் துறையின் திறமையின்மையையே இது காட்டுகிறது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு இயந்திரங்கள் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளன" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் குற்றம்சாட்டினார்.

"மணிப்பூர் மாநில சட்ட அமைப்பின் செயல்திறனில் பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சிதைந்துவிட்டது. குற்றங்கள் மீது விசாரணை நடத்துவதற்கான திறனை மாநில காவல் துறை இழந்துவிட்டது. காவல்துறை தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. மாநிலத்தில் முற்றிலுமாக சட்டம் - ஒழுங்கு இல்லை. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசு இயந்திரங்களால் மக்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால், குடிமக்களின் கதி என்ன?" என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் காவல் துறை எடுத்த நடவடிக்கைகளை தேதி வாரியாக அறிக்கையாக மாநில காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் 7-ம் தேதி மதியம் 2 மணிக்கு மாநில டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள், இழப்பீடு, பணி மறுசீரமைப்பு, விசாரணை, அறிக்கைத் தாக்கல் ஆகியவற்றை மேற்பார்வையிட முன்னாள் நீதிபதிகள் குழுவை அமைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 6,523 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவற்றில், 11 எஃப்ஐஆர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் பின்னணி: மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி இனத்தவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து குகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதமாக நடைபெறும் வன்முறையில் இதுவரை 182-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே 4-ம் தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடையின்றி ஒரு கும்பல் இழுத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. இந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதுதொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 2 பெண்களும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், “எங்களை ஆடையின்றி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஐஜி அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கைஇல்லை. அதனால், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும். எங்கள் அடையாளங்களை வெளியிட கூடாது” என்று கோரியுள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும், வழக்கை வேறு எந்த மாநிலத்தில் விசாரிக்க அனுமதி அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த 2 மனுக்களும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வாதங்களுக்குப் பின்னர், “மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக இதுவரை எத்தனை எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அட்டர்னி ஜெனரலை பார்த்து தலைமை நீதிபதி நேற்று கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், “மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிராக கடந்த மே 4-ம் தேதி நடந்த வன்முறை மிகவும் கொடூரமானது. இதுகுறித்து எப்ஐஆர் பதிவு செய்ய தாமதம் செய்தது ஏன்? மணிப்பூரில் வன்முறை தொடர்பாக இதுவரை எத்தனை எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அல்லது சிபிஐ விசாரணை மட்டும் போதாது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் இல்லத்துக்கே நீதி சென்றடைய வேண்டும். மணிப்பூரில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் எத்தனை வழக்குகள் பெண்களுக்கு எதிரானவை?

எத்தனை வழக்குகள் வேறு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவிவழங்கும் விஷயத்தில் தற்போதைய நிலவரம், இதுவரை 164-வது சட்டப் பிரிவின் கீழ் எத்தனை பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது போன்ற அனைத்து விவரங்களையும் மத்திய, மாநில அரசுகள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பெண் நீதிபதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவை நியமிப்போம்” என்ரு நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x