Published : 08 Nov 2017 09:14 AM
Last Updated : 08 Nov 2017 09:14 AM

டெல்லியில் அடர் பனி, காற்று மாசு அதிகரிப்பு: தொடக்க பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

டெல்லியில் அடர் பனி நிலவுவதாலும் காற்று மாசு அதிகரித்துள்ளதாலும் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மற்ற பள்ளிகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. அத்துடன் பல்வேறு பகுதிகளில் உள்ள காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) கடுமையாக அதிகரித்து (448) காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்லியில் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பஞ்சாப், ஹரியாணா, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் 25 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து, இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) தலைவர் கே.கே.அகர்வால் டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், “டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரமாக உள்ளவர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். எனவே, அவர்களை அதிக நேரம் வெளியில் அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக பள்ளிக்கூடங்களில் அனைத்து வெளிப்புற விளையாட்டு மற்றும் நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர். சில நாட்களுக்கு பள்ளிகளை மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து மணீஷ் சிசோடியா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளை புதன் கிழமை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. காற்று மாசு அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இதுபோல, இறைவணக்கம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட எந்தவித வெளிப்புற நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என மற்ற பள்ளி களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஆஸ்த்மா, இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். குறிப்பாக காலை மற்றும் மாலை நேர நடை பயிற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x