Published : 29 Jul 2023 05:13 PM
Last Updated : 29 Jul 2023 05:13 PM

பொது சிவில் சட்டம்: 80 லட்சம் கருத்துகள் பெறப்பட்டதாக 22-வது சட்ட ஆணையம் தகவல்

புதுடெல்லி: பொது சிவில் சட்டம் தொடர்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து 80 லட்சம் கருத்துகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக 22-வது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பொது சிவில் சட்டம் தொடர்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து கருத்துகளை பெருவதற்கான முயற்சியில் 22வது சட்ட ஆணையம் ஈடுபட்டது. இதற்கான அறிவிப்பினை ஓய்வுபெற்ற நீதிபதி ரிது ராஜ் அஸ்வதி தலைமையிலான 22-ஆவது சட்ட ஆணையம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிட்டது. அந்த அறிவிப்பில், "கடந்த 2016, ஜூன் 17 அன்று தேதியிட்ட மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் குறிப்புக்கு இணங்க, பொது சிவில் சட்டம் குறித்து இந்தியாவின் 22-வது சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. தொடக்கத்தில், இந்தியாவின் 21-வது சட்ட ஆணையம் இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்தது.

அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் 07.10.2016 அன்று கோரியது. ஏராளமான கருத்துகளைப் பெற்ற 21-வது சட்ட ஆணையம், தனது அறிக்கையை 31.08.2018 அன்று வெளியிட்டது. 21-வது சட்ட ஆணையத்தின் காலம் முடிவடைந்ததை அடுத்து, 22-வது சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது. பொது சிவில் சட்டம் எனும் கருத்தாக்கத்தின் முக்கியத்துவத்தையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு இந்த விவகாரம் குறித்து புதிதாக ஆய்வு செய்ய 22-வது சட்ட ஆணையம் முடிவு செய்தது.

22-வது சட்ட ஆணையத்திடம் பொதுமக்களும், மத அமைப்புகளும் பொது சிவில் சட்டம் குறித்த தங்கள் கருத்துகளை முன்வைக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் லிங்கைப் பயன்படுத்தி அதன் மூலம் கருத்துகளைத் தெரிவிக்கலாம் அல்லது சட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலர் முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பலாம். சட்ட ஆணையத்துக்கு கருத்துகளைத் தெரிவிக்கும் தனி நபர்கள் அல்லது அமைப்புகளை சட்ட ஆணையம் விசாரிக்க அல்லது கலந்துரையாட அழைக்கலாம்" என்று தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை அடுத்து 22-வது சட்ட ஆணையம் கடந்த 14-ம் தேதி வெளியிட்ட இது தொடர்பான இரண்டாவது அறிவிப்பில், கருத்துகளைத் தெரிவிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வந்த கோரிக்கையை அடுத்து மேலும் 2 வாரங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, கருத்துகளைத் தெரிவிக்க ஜூலை 28-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று 22-வது சட்ட ஆணையம் தெரிவித்தது.

காலக்கெடு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை சுமார் 80 லட்சம் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து கருத்துகளைப் பெற்றுள்ளதாக 22-வது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், கருத்துகளைத் தெரிவிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x