Last Updated : 23 Nov, 2017 08:26 AM

 

Published : 23 Nov 2017 08:26 AM
Last Updated : 23 Nov 2017 08:26 AM

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் உயர்கிறது: 5 கோடி ஊழியர்கள் பயன் பெறுவார்கள்- நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின் உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் தீர்வு

நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்பு, உச்ச நீதிமன்ற உத்தரவு உதவியுடன் ஓய்வூதியத் தொகையை 12 மடங்கு (1,200%) உயர்த்திப் பெற்று தனியார் நிறுவன ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இந்த முன்மாதிரி வழியாக நாடு முழுவதும் உள்ள 5 கோடி வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் பயனடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (பிஎப்) பணம் செலுத்தி வருகின்றனர். இந்த கணக்கில் ஊழியர் சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், நிறுவனத்தின் சார்பில் 12 சதவீதமும் சேர்த்து ஊழியரின் கணக்கில் செலுத்தப்படும். இதற்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் வட்டி வரவு வைக்கப்படும். ஊழியர் வேலையை விட்டுச் செல்லும்போது, மொத்த தொகை கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இடையில் திருமணம், வீடு வாங்குதல், படிப்புச் செலவு ஆகியவற்றுக்கும் பணம் திரும்பப் பெற முடியும். கடந்த 1952-ம் ஆண்டு இயற்றப்பட்ட வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தின் கீழ் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கணக்குடன் இணைந்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும் 12 சதவீதத்தில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திலும், எஞ்சியுள்ள 3.67 சதவீதம் வைப்பு நிதி கணக்கிலும் செலுத்தப்படும். ஒய்வூதிய திட்டத்துக்கு செலுத்தும் தொகைக்கு உச்சவரம்பு உண்டு. கடந்த 1952-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்ட போது ரூ.300 ஆக இருந்த உச்சவரம்பு படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2001-ம் ஆண்டு ரூ.6,500 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், 1.9.2014 முதல் தற்போது வரை உச்சவரம்பு ரூ.15,000 ஆக உள்ளது.

ரூ.15,000 உச்சவரம்பு

இதன்படி, ஊழியர் ஒருவர் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், ரூ.15,000-ல் 8.33 சதவீதம் தொகை மட்டுமே ஓய்வூதிய திட்டத்துக்கு செல்லும், எஞ்சியுள்ள 3.67 சதவீதம் வருங்கால வைப்பு நிதிக்கு சென்றுவிடும். கடந்த 95-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, ஊழியர்கள் விரும்பினால், ரூ.15,000 உச்சவரம்பைத் தாண்டி அவர்களது அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி(பேசிக் + டிஏ) அளவில், 8.33 சதவீதத்தை ஓய்வூதிய திட்டத்துக்கு செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சில ஊழியர்கள் கூடுதல் தொகை செலுத்த முயன்றபோது, அதை வருங்கால வைப்பு நிதி அலுவலகம் நிராகரித்து விட்டது. கூடுதல் தொகை செலுத்தும் வசதியை 6 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். அந்த காலக்கெடு முடிந்துவிட்டதால் இனி ஏற்க முடியாது என்று நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப் போராட்டங்களின் ஒரு பகுதியாக ஆர்.சி.குப்தா மற்றும் பலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.சி.பந்த் அடங்கிய அமர்வு, கடந்த 4.10.2016-ல் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் தொடர்ந்து 12 சதவீதம் தொகை செலுத்தி வரும்போது, காலக்கெடு முடிந்துவிட்டது என்று கூறி, அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை மறுப்பது நியாயமற்றது. எனவே, ஏற்கெனவே செலுத்தியுள்ள பணத்தில் கணக்கை சரி செய்து கொண்டு அவர்களுக்கு ஓய்வூதிய பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதுபோல வேறு சில வழக்குகளிலும் ஊழியர்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.

ரூ.30,592 ஆக உயர்வு

இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஹரியாணா சுற்றுலா கழகத்தில் பணியாற்றி 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற பிரவீன் கோலி (62) என்பவர் தனக்கு ஓய்வூதிய தொகையை அதிகரிக்கக் கோரி சட்டப் போராட்டம் நடத்தினார். இதில், அவர் வெற்றி பெற்று கடந்த 1-ம் தேதி முதல் தனது கடைசி சம்பளத்தில் பாதி தொகையான ரூ.30,592-ஐ ஓய்வூதியமாக பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு அவருக்கு ரூ.2,372 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் 2014-ம் ஆண்டு ஓய்வுபெற்றதால் அப்போது இருந்த உச்சவரம்பு ரூ.6,500 என்ற அடிப்படையில் அவரது சம்பளத்தில் பிடிக்கப்பட்ட ரூ.541.45-ஐ அடிப்படையாகக் கொண்டு அவருக்கு குறைந்த தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.

ஊழியர்கள் ஓய்வூதிய அளவை உயர்த்தி செலுத்தலாம் என்று சட்டத் திருத்தம் வந்த 95-ம் ஆண்டில் இருந்து ஓய்வுபெற்ற நாள் வரை கூடுதலாக ரூ.15.37 லட்சம் செலுத்தும்படி கூறப்பட்டது. அந்த தொகையை பிரவீன் கோலி செலுத்திவிட்டார். ஆனால், அவருக்கு ஓய்வுபெற்ற நாளில் இருந்து கடந்த நவம்பர் வரை வர வேண்டிய கூடுதல் ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.13.23 லட்சம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு ரூ.2.14 லட்சம் மட்டுமே கூடுதல் செலவாகி உள்ளது. இதன்மூலம் அவரது ஓய்வூதியம் ரூ.2,372-ல் இருந்து ரூ.30,592 ஆக உயர்ந்துள்ளது. இது 1,200 சதவீத உயர்வாகும்.

இந்த முன்மாதிரி வழக்கு தற்போது வருங்கால வைப்பு நிதி செலுத்திவரும் அனைவருக்கும் பொருந்தும் என்று நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதால், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டத்தில் இடம்பெற்றுள்ள 5 கோடிக்கும் அதிகமான தனியார் நிறுவன ஊழியர்கள் பயன்பெறுவர் என்று கூறப்படுகிறது. ஊழியரும், நிறுவனமும் இணைந்து விண்ணப்பித்தால் மட்டுமே ஓய்வூதிய பங்களிப்பு தொகையில் மாற்றம் செய்யப்படும். இதுகுறித்து வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தனியார் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினால் மட்டுமே அனைத்து ஊழியர்களுக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவின் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x