Published : 27 Jul 2023 05:20 PM
Last Updated : 27 Jul 2023 05:20 PM

அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா செப்.15 வரை பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

எஸ்.கே.மிஸ்ரா | கோப்புப் படம்

புதுடெல்லி: அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா செப்டம்பர் 15 வரை பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு மத்திய அரசு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியது. வரும் நவம்பர் வரை அவர் பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது என கடந்த 11-ம் தேதி அறிவித்தது. மேலும், இம்மாதம் 31-ம் தேதிக்குள் எஸ்.கே.மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதற்குள் மத்திய அரசு மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்கான காலக்கெடு முடிவடைய சில தினங்களே உள்ள நிலையில், அவர் அக்டோபர் 15-ம் தேதி வரை பதவியில் நீடிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா 12 பக்க மனுவை நேற்று தாக்கல் செய்தார். நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளதால், அவர் பதவியில் தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று அதில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு துஷார் மேத்தா நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஸ்.கே.மிஸ்ரா அமலாக்கத் துறை இயக்குநராக செப்டம்பர் 15 வரை பதவியில் நீடிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

வழக்கின் பின்புலம்: அமலாக்கத் துறையின் இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ரா (63) கடந்த 2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவரது 2 ஆண்டு பதவிக்காலம் கடந்த 2020-ம் ஆண்டு முடிந்தது. அதன்பின் அவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது. அப்போதே இதை எதிர்த்து ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் நேரத்தில் அவர் பதவிக் காலம் முடிய 2 மாதங்கள்தான் இருந்தது. அதனால் பதவி நீட்டிப்புக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2021 செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கியது. அப்போதே அவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என கூறியிருந்தது.

இந்நிலையில், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) சட்டம் மற்றும் டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி அமலாக்கத் துறை, சிபிஐ தலைவர்களுக்கு இரண்டாண்டு பதவி காலத்துக்குப் பின்பு மேலும் ஒராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது. இதன்படி மிஸ்ராவின் பதவிக் காலம் 2022 நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. கடந்தாண்டு நவம்பரில் மிஸ்ராவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடுத்தனர். இந்த மனுக்களை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து ஜூலை 11-ல் தீர்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு 3-வது முறையாக அளிக்கப்பட்ட பதவி நீட்டிப்பு சட்டவிரோதம். அவர் வரும் 31-க்குள் பதவியில் இருந்து விலக வேண்டும்” என்றனர்.

இந்த நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா செப்டம்பர் 15 வரை பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் இப்போது அனுமதி அளித்துள்ளது.

யார் இந்த மிஸ்ரா? - சஞ்சய் குமார் மிஸ்ரா 1984-ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரி. அமலாக்கத்துறையில் நியமிப்பதற்கு முன்பாக அவர் டெல்லி வருமான வரித்துறையின் தலைமை ஆணையராக இருந்தார். பொருளாதார நிபுணரான இவர் பல வழக்குகளை திறம்பட விசாரித்துள்ளார். இவர் அமலாக்கத் துறை இயக்குநரான பின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் விசாரணையில் சிக்கினர். இதனால் அமலாகத் துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என அவர்கள் குற்றம்சாட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x