Last Updated : 25 Jul, 2023 07:38 PM

 

Published : 25 Jul 2023 07:38 PM
Last Updated : 25 Jul 2023 07:38 PM

முதியோர் உதவித் தொகையை உயர்த்தும் எண்ணம் இல்லை: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: முதியோர் உதவித் தொகையை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதை இன்று நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் எம்.பியான டி.ரவிக்குமார் கேள்விக்கு, மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி டி.ரவிக்குமாரின் கேள்விக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த எழுத்துபூர்வ பதில் பின்வருமாறு: ''தேசிய சமூக உதவித் திட்டத்தின்(என்எஸ்ஏ) கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களைச் சேர்ந்த 60 முதல் 79 வயதுக்குட்பட்ட முதியோர்களுக்கு மாதம் ரூ.200 வீதம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகை மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது.

தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை. எவ்வாறாயினும், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் என்எஸ்ஏபியின் கீழ் மத்திய உதவிக்கும் அதிகமாகக் கூட்டி வழங்க ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த தொகைகள் முதியோர் ஓய்வூதியத்தின் கீழ் தற்போது ஒரு பயனாளிக்கு மாதம் ரூ.50 முதல் ரூ.3000 ரூபாய் வரை மாநில அரசுகளால் உயர்த்தி வழங்கப்படுகின்றன. 2002-03 முதல் 2013-14 வரை, மாநிலத் திட்டமாக என்எஸ்ஏபி செயல்படுத்தப்பட்டது.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், தேசிய குடும்ப நலத் திட்டம் மற்றும் அன்னபூர்ணா ஆகிய அனைத்து துணைத் திட்டங்களுக்கும் ஒரே ஒதுக்கீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதல் மத்திய உதவித் தொகையாக(ஏசிஏ) வழங்கப்பட்டது. இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் - இரண்டும் 2009 முதல் அறிமுகப்படுத்தப்பட்டன. 2014-15 முதல், இத்திட்டம் 'மத்திய நிதியுதவித் திட்டமாக' செயல்படுத்தப்படுகிறது'' என்று இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் அளித்த பதில் குறித்து திமுக எம்.பி. டி.ரவிகுமார் கூறும்போது, ''அமைச்சர் இணைப்பில் கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் 2011-12 இல் 12 லட்சத்து 4 ஆயிரமாக இருந்த முதியோர் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை 2021-22 ஆம் ஆண்டில் 12 லட்சத்து 39 ஆயிரமாக உயர்ந்துள்ளது எனத் தெரிகிறது. அவர்களுக்கு மத்திய அரசு கொடுத்த ஓய்வூதியத் தொகைக்கான நிதி 2021-22 இல் 589.85 கோடி. அதற்கு முந்தைய ஆண்டில் 201.26 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டதால் எஞ்சிய தொகை 2021 இல் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மற்ற ஆண்டுகளில் விடுவிக்கப்பட்ட நிதியைப் பார்த்தால் 2016-17 முதல் 3 ஆண்டுகள் ஆண்டொன்றுக்கு 360.15 கோடி விடுவிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

அதன் பின்னர் 2019-20 இல் 250 கோடியும் 2020-21 இல் 201.26 கோடியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு உயர்த்தாவிட்டாலும் இப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஓய்வூதியத் தொகை ரூ.1000 என்பதை ரூ.1200 என உயர்த்தி வழங்கியுள்ளார்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x